பிரளயம்-பித்தன் -கவிக்கோ (27-28)

 

பிரளயம்

 

நீ சீர்திருத்தவாதியா ?

 என்று கேட்டேன் .

 

இல்லை :நான்

திருத்துவதற்காக அல்ல ,

சங்காரத்திற்காக

 வந்திருக்கிறேன்

என்றான் பித்தன் .

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

குப்பைகளை எப்படிச்

 சீர்திருத்துவது ?

 

 

 

நான் கூட்டித் தள்ளவே

வந்திருக்கிறேன் .

 

இல்லை

என் துடைப்பம் .

 

 

உங்கள் ஆபாசமான

உண்டு களை எல்லாம்

மறுக்கவே வந்திருக்கிறேன் .

 

‘இல்லை ‘யின்

 தூதுவன் நான் .

‘இல்லை ‘ என்

மகாவாக்கியம் .

‘இல்லை ‘ என்

ஒற்றைச்சொல் வேதம் .

 

 

போதிக்க அல்ல .

உங்களுக்குப்

போதிக்கப்பட்டத்தை

அழிக்கவே வந்திருக்கிறேன் .

 

 

நினைவூட்ட அல்ல ,

உங்களுக்கு

மறதியைத்

தரவே வந்திருக்கிறேன் .

 

 

உங்கள் நினைவுகள்

 இறந்த காலத்துக்

குப்பைகளாகவே

இருக்கின்றன .

 

 

 

ஒளியைத் தர அல்ல ,

உங்களுக்கு

இருளைத் தரவே

வந்திருக்கிறேன் .

 

 

மூர்க்கத்தனமான ஒளியில்

 உங்கள் நட்சத்திரங்கள்

மங்கிப் போய்விட்டன .

 

 

 

விழிப்பைத்தர அல்ல ,

உங்களுக்கு

உறக்கத்தைத் தரவே

  வந்திருக்கிறேன் .

 

 

 

உங்கள்

பார்வையற்ற விழிப்பில்

உங்கள் கனவுகளை

நீங்கள் இழந்துவிட்டீர்கள்.

 

 

 

வழிகாட்ட அல்ல ,

உங்களை

வழிமறிக்கவே

வந்திருக்கிறேன் .

 

 

 

உங்கள்

பார்வைகள் எல்லாம்

மயானத்திற்கே செல்கின்றன .

 

நிலாவின்

 ஒளிப் பக்கத்தையே

பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு

அதன்

இருண்ட பக்கத்தையும்

காட்டவே வந்திருக்கிறேன் .

 

 

 

இருண்ட பக்கமும்

சேர்ந்துதான் நிலா :

அதுவும் அழகானதே

என்பதை

உணர்த்தவே வந்திருக்கிறேன் .

 

 

 

உங்கள் எடைக் கற்களை

எடை போடவே

வந்திருக்கிறேன் .

 

 

 

உங்கள் பீடங்கள்

 சமாதிகள் என்று

காட்டவே வந்திருக்கிறேன் .

 

 

 

மழையாக அல்ல ,

பிரளயமாகவே

வந்திருக்கிறேன் .

 

 

அது

நோவாவின் பேழையையும்

மூழ்கடிக்கும் .

 

பித்தன் -கவிக்கோ (27-28)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி