அனாதை-பித்தன் -கவிக்கோ (30)

 

அனாதை

 

 

அனாதையை ஆதரிப்பார்

யாருமில்லையா ?என்று

பித்தன்

கடைத்தெருவில்

கூவிக்கொண்டிருந்தான் .

 

 

யார் அந்த

அனாதை ? என்று கேட்டேன்

 

 

 “உண்மை “ என்றவன் ,

கடைத்தெருவில்

அது அனாதையாக

அழுது கொண்டிருத்தது

அதை யாருமே

அடையாளம் கண்டுகொள்ளவில்லை

என்று கூறினான்.

 

 

ஏன் ? என்றேன்

நெற்றியில் திருநீரோ ,

நாமமோ இல்லை ,

மார்பில்

சிலுவை இல்லை ,

தலையில்

தொப்பியில்லை

அதனால் அதை

யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை ‘

என்றான்.

 

 

 

நீ மட்டும் எப்படி

அடையாளம் கண்டுகொண்டாய் ?

என்று கேட்டேன் .

 

 

 

 

யாருமே

அடையாளம்

கண்டுகொள்ளாததிலிருந்து

அதை நான்

அடையாளம் கண்டுகொண்டேன் .

 

 

 

மேலும்

அதன் உடலில்

 சிலுவை அறையப்பட்ட

காயங்களும் ,கு

ண்டுகளும்

இருந்தன .

 

 

கழுத்தில்

தூக்கு கயிற்றின்

 வடு இருந்தது .

 

 

 

அதன் உதடுகள்

விஷத்தால்

கறுத்திருந்தன .

 

 

அதனாலும்

அடையாளம்

 கண்டுகொண்டேன்

  என்றான்.

 

 

பித்தன் -கவிக்கோ (30)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி