அறிக்கை-பித்தன் -கவிக்கோ (34-37)


அறிக்கை

 

 

உன் கொள்கை என்ன ?

 என்று பித்தனிடம் கேட்டேன் .

 

‘கொள்கையின்மை’

என்றான் பித்தன் .

 

அவன் மேலும் சொன்னான் :

 

 

ஒரு கொள்கையை

ஏற்பவன்

கூண்டில் அடைபட்டுவிடுகிறான் .

 

 

நான்

 கூண்டில் அடைபடும்

 பறவை அல்ல :

அது தங்கக் கூண்டாக

 இருந்தாலும் சரி .

 

கூண்டுப் பறவை

 கூண்டின் கூரையையே

வானம் என்று வாதாடும் .

 

 

சிறகு

 சுமை என்று

சொல்லும் .

 

 

தத்துவங்கள் எல்லாம்

ஒரு மகா வாக்கியத்தின்

 உரைகளே .

 

 

 

 

 

ஓர் உரையை மட்டும்

ஏற்பவன்

உண்மையின் பல பரிணாமங்களைக்

 காணாமல் போய்விடுவான் .

 

 

மதவாதி

என் தோட்டத்துப்

பூவில் மட்டும்தான்

தேன் இருக்கிறது

என்கிறான் .

 

நானோ தேனீயாக இருக்கிறேன் .

 

பூக்களின் வேறுபாடுகளைத்

 தேனீ

இலட்சியம் செய்வதில்லை .

 

 

தோட்டத்து வேலிகள்

அதைத் தடுப்பதில்லை .

 

எல்லாப் பூக்களிலும்

தேன் உண்டு

 என்பதும்

தேன் என்பது ஒன்று தான்

 என்பதும்

தேனீக்கு மட்டுமே

தெரிகிறது.

 

 

ஒரு பூவின் தேன்

தேனீக்குப் போதாது .

 

 

நான் எப்போதும்

நிரம்பாதவனாக

இருக்கிறேன் .

சமுத்திரத்தைப் போல ,

அதனால்

ஜீவ நதிகள் என்னிடம்

 வந்து கொண்டே இருக்கின்றன .

எந்த உருவத்தையும்

பதித்துக்கொள்ளாமலிருக்கிறேன் .

கண்ணாடியைப் போல ,

அதனால்

எல்லா வடிவங்களின்

அழகையும் நான் ரசிக்கிறேன் .

 

என்னை

முழுவதும் திறந்து

காட்டாதவனாக இருக்கிறேன் .

இரவைப் போல .

அதனால்

நட்சத்திரங்களும்

விளக்குகளும்

தணியாத ஆர்வத்தோடு

என்னை

தினமும் பார்க்கின்றன .

 

 

எனக்குள் இருப்பதையெல்லாம்

 பேசி விடாமல் இருக்கிறேன் :

வீணையைப் போல ,

அதனால்

மீண்டும் மீண்டும் நான்

மீட்டப்படுகின்றேன் .

 

 

 

என்னிடம்

மலர்வதையும்

கனிவதையும்

நான் ஒரே நேரத்தில்

கொடுத்து விடுவதில்லை :

மரத்தைப் போல .

அதனால் நான்

 எதிர்பார்ப்போடு

 நீருற்றப்படுகிறேன் .

 

முழுவதும்

புரிந்துகொள்ளப்பட

 முடியாதவனாக இருக்கிறேன்

.கனவைப் போல ,

அதனால்

நான் யாருக்கும் சலிப்பதில்லை .

 

நான் எல்லாவற்றையும்

 புரிந்துகொள்ள முயல்வதில்லை .

புரிந்து கொள்ளப்பட்டவை

 சுவாரஸ்யம் அற்றுப்போகும் .

நான் மர்மங்களின் ரசிகன்.

 

 

நான் ஆசைப்பட்டதை எல்லாம்

அடைந்துவிட வேண்டும்

என்று நினைப்பதில்லை ,

அதனால் என்

 ஜீவ நெருப்பு

அணையாமல் இருக்கிறது .

 

 

நான் எப்போதும்

முடிக்க்கப்பட முடியாதவனாக

இருக்கிறேன் :

இறைவனைப் பற்றிய

 விவாதத்தைப் போல ,

அதனால் நான்

 இருந்துகொண்டே இருப்பேன் .

 

பித்தன் -கவிக்கோ (34-37)

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி