சிதறு தேங்காய்-பித்தன் -கவிக்கோ (44)


சிதறு   தேங்காய்

 

சிதறு தேங்காயைப்

பொறுக்கிக் கொண்டிருந்தவனைத்

தடுத்து நிறுத்தினான் பித்தன் .

 

அவனை ஏன் தடுக்கிறாய் ?

என்று கேட்டேன் .

 

நீங்கள் உங்களைப்

பொறுக்க வேண்டியிருக்கத்

 தேங்காயைப்

பொறுக்கி கொண்டிருக்கிறீர்களே

 என்றான் பித்தன்

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

நீங்கள் உடைந்து

துண்டு துண்டாகிப்

போனதை உணரவில்லையா ?

 

 

வீட்டிலும் வெளியிலும்

நீங்கள்

சிதறிக் கிடப்பதை

அறியவில்லையா ?

 

 

மனமும்

வயிறும் உடைக்க

 நீங்கள் ஒருவரே

எத்தனை துண்டுகளாகிவிட்டீர்கள் !

 

 

உங்கள் துண்டுகளுக்கிடையே

 ஓயாத போர் நடக்கிறது .

 

 

 

ஒவ்வொரு துண்டிலும்

நீங்கள்

வெவ்வேறாக இருக்கிறீர்கள் .

 

உங்களை பிரதிபலிக்கும்

கண்ணாடிகளால்

உங்கள் பிம்பங்களும்

உடைந்து போகின்றன .

 

நீங்கள்

 கடைத் தேங்காயாக

இருக்கிறீர்கள் .

வழிப் பிள்ளையாருக்காக

உடைக்கப்படுகிறீர்கள் .

 

 

சிதறிக்கிடக்கும் உங்களை

 யார் யாரோ பொறுக்கிச்

 சாப்பிடுகிறார்கள் .

 

 

உடைந்து

சிதறிக் கிடப்பவர்களே !

உங்களை எப்படிப்

பொறுக்கப் போகிறீர்கள் ?

 

 

அப்படியே பொறுக்கினாலும்

சிந்திப் போன

உங்கள் நீரை

 எப்படி சேகரிப்பீர்கள்

 

பித்தன் -கவிக்கோ (44)

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி