மத்திய ரேகை-பித்தன் -கவிக்கோ (56-57)

 

மத்திய ரேகை

 

பித்தன்

கவடி ஆட்டத்தைப்

பார்த்துக் கொண்டிருந்தான் .

 

கவடி உனக்கு

 பிடிக்குமா ? என்று கேட்டேன் .

 

 

 

நடுக்கோடு எனக்குப் பிடிக்கும்

 என்றவன்,

 நடுக்கோட்டைத்

தொடுவதால்

அவர்கள் பிழைகிறார்கள் .

உயிரின் ரகசியம்

நடுக்கோட்டில் இருக்கிறது

என்று கூறினான்.

 

 

அவன் மேலும் சொன்னான் :

 

மத்திய ரேகைக்குச்

 செல்லுகிறவர்கள்

ஜீவ நீரை

அருந்துகிறார்கள் .

 

 

துருவங்களுக்குப்

போகின்றவர்கள்

மரணத்தின் வலையில்

விழுகிறார்கள் .

 

 

மிகை

 நல்லதையும்

தீயதாக்கி விடுகிறது .

 

 

ஆலகாலம் என்பது

வேறொன்றுமில்லை .

அமிர்தத்தின் மிகைதான் .

வைகறையும் அந்தியும்

 அழகாய் இருப்பதற்குக்

காரணம்

 அவை நடுவில் இருக்கின்றன .

 

 

அதனால்

இருள் ,ஒளி இரண்டும்

அவற்றை

அலங்கரிக்கின்றன .

 

 

வாதப் பிரதிவாதங்கள்

இரண்டு கரைகள்.

உண்மையோ

நதியாக

இரண்டுக்கும்

 நடுவில் ஓடுகிறது .

 

பூவின் சாரம்

நடுவில் ஒளிந்திருக்கும்

தேனில் இருக்கிறது .

உதிரும் இதழ்களில்

இல்லை .

 

 

மையத்திலிருந்து

 விலகும் எதுவும் 

வீரியம்  இழக்கிறது .

 

 

 

வாழ்க்கை என்பது

கழைக் கூத்து  .

சமநிலை  தவறுகிறவன்

விழுந்து விடுகிறான் .

 

பித்தன் -கவிக்கோ (56-57)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி