வீடு-பித்தன் -கவிக்கோ (64-66)

 

வீடு

 

வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களை

பார்த்து

பித்தன் சிரித்தான் .

 

 

ஏன் சிரிக்கிறாய் ?

என்று கேட்டேன் ,

 

 

கூடு கட்டுவதாக

நினைத்துக்கொண்டு

இந்தப் பறவைகள்

கூண்டுகள் செய்கின்றன

‘என்றான் .

 

அவன் மேலும் சொன்னான் :

 

வீடு கட்டுவதற்கு

 மலையிலிருந்து

 கற்களைக்

கொண்டு வருகிறீர்கள் .

 

 

மலையின் மௌனத்தையும்

உங்களால்

கொண்டுவர முடிந்திருந்தால் .....

 

 

காட்டிலிருந்து

மரங்களை

கொண்டு வருகிறீர்கள் .

 

 

காட்டின்

 சுதந்திரத்தை

உங்களால்

கொண்டுவர முடிந்திருந்தால்...

 

கடலிலிருந்து

சிப்பிகளைக்

கொண்டு வருகிறீர்கள்.

 

 

கடலின்

பெருமையையும்

 உங்களால் 

கொண்டுவர முடிந்திருந்தால்...

 

 

நதியிலிருந்து

நீரைக்

கொண்டு வருகிறீர்கள் .

 

 

நதியின்

 பாடலையும்

உங்களால் 

கொண்டுவர முடிந்திருந்தால்...

 

 

 வெயிலிலிருந்து தப்பிக்க

 கூரை கட்டுகிறீர்கள்.

அதனால்

நிலவை இழந்துவிடுகிறீர்கள்.

 

 

புயலைத்

 தடுக்கச்

சுவர் எழுப்புகிறீர்கள் .

அதனால்

தென்றலையும் தடுத்துவிடு கிறீர்கள் .

 

 

நான்கு சுவர்களால்

நீங்கள்

நான்கு  திசைகளையும்

இழந்து விடவில்லையா ?

 

 

 

 

 

உங்கள்

வீடுகளுக்குள் மட்டுமல்ல ,

உங்களுக்குள்ளும்

அறைகளைக்

கட்டிக்கொள்கிறீர்கள்.

 

 

உங்கள் வீடு

 மொட்டாகவும்

நீங்கள் காற்றாகவும்

இருந்திருந்தால்

 உங்கள் வாசம்

வாசமாகியிருக்குமே !

 

 

 

உங்கள் வீடு

தாயின் மார்பாகவும்

 நீங்கள்

 ரத்தமாகவும்

இருந்திருந்தால்

நீங்கள் பாலாகியிருப்பீர்களே !

 

உங்கள் வீடு

கூடாகவும்

நீங்கள்

பட்டாம்பூச்சியாகவும்

 இருந்திருந்தால்

 நீங்கள்

சிறகுகளை

 பெற்றிருப்பீர்களே !

 

வீட்டுக்குள்

நுழையும்போது

செருப்புகளை மட்டுமே

உங்களால்

வெளியே விடமுடிகிறது .

 

வெளியே செல்லும்போது

 நத்தையைப் போல்

வீட்டையும் சுமந்துதான்

 செல்லுகிறீர்கள் .

 

 

 

உங்கள் வீட்டுக்குள்

நுழையும்போதெல்லாம்

உங்கள் ஏக்கம்

 உங்கள் வீட்டைத்

 தேடுகிறதல்லவா ?

 

 

 

குயில்

கூடு கட்டுவதில்லை

அதனால் தான் அது

பாடுகிறது .

 

 

பித்தன் -கவிக்கோ (64-66)

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி