புத்தகம்-பித்தன் -கவிக்கோ (83-84)
புத்தகம்
பித்தன்
மழைக்காகப்
பள்ளிக் கூடத்தில்
ஒதுங்கினான் .
குழந்தைகளின் கையிலிருந்த
புத்தகங்க்களைப் பார்த்து ,
புத்தகங்களே !
சமர்த்தாயிருங்கள் .
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள் “
என்றான்
அவன் மேலும் சொன்னான் .
குழந்தைகளே
பாடப் புத்தகங்களாக
இருக்கிறார்கள் .
அவர்கள் கையில் ஏன்
காகிதப் குப்பைகளைத்
தருகிறீர்கள் ?
உங்கள் புத்தகங்கள்
கண்களைத் திறப்பதில்லை .
ஊற்று கண்களைத்
தூர்த்து விடுகின்றன .
காகித ஓடங்களை
நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி
அக்கரை போய்ச்
சேர்வீர்கள் ?
இதோ !
இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே
புரளுகின்றன,
நீங்களோ அவற்றைப்
படிப்பதில்லை .
இதோ !
உண்மையான
உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன .
நீங்களோ அவற்றைக்
கற்றுக்கொள்வதில்லை .
ஒவ்வொரு பூவும்
பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை .
நீங்கள்
நட்சத்திரங்களை
படிக்கக் கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத
எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை
அறிந்திருப்பீர்கள் .
நீங்கள்
மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை
அறிந்திருப்பீர்கள் .
உங்களுக்குக்
கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள்
மனிதனின் சாரத்தை
அறிந்திருப்பீர்கள் .
எழுத்துக்களால் அல்ல ,
காயங்களால் கற்பதே
கல்வி என்பதை
அறிந்து கொள்ளுங்கள் .
உங்கள் புத்தகங்கள்
விளக்குகளாக இருக்கின்றன .
சூரியனைக் காண
விளக்குகள்
தேவைப்படுவதில்லை .
பித்தன் -கவிக்கோ (83-84)

Comments
Post a Comment