பித்தன் -கவிக்கோ அப்துல் ரகுமான் (முழுத் தொகுப்பு )
++++++++++++++++உள்ளே ++++++++++++++++
·
அறிமுகம் -(05-06)
·
கலைஞர் முன்னுரை -(08-13)
·
அம்பலம் -(16-17)
·
ஆடை -(20-21)
·
சுவர் -(24-25)
·
பிரளயம் -(27-28)
·
அனாதை -(00-30)
·
வினா -(00-32)
·
அறிக்கை -(34-37)
·
பக்கவாதம் -(39-42)
·
சிதறு தேங்காய் -(00-44)
·
பயணம் -(46-48)
·
அவதாரம் -(50-51)
·
இருள்
-(53-54)
·
மத்திய ரேகை -(56-57)
·
நிகழ்
-(00-59)
·
கதவு
-(61-62)
·
வீடு -(64-65)
·
பெண்
-(68-69)
·
பசி
-(71-72)
·
உறக்கம் -(74-75)
·
கூட்டம் -(77-78)
·
தீக்குச்சி -(80-81)
·
புத்தகம் -(83-84)
·
வார்த்தை -(00-86)
·
உரிமை -(88-90)
·
காயம் -(92-93)
·
பாரம்
-(96-98)
· இணை -(102-104)
எந்த நதிஎன் “ஆலாபனை”யின் பாடகன்
“நேர்” களின் ரசிகன்
பித்தன்
“எதிர் “ களின் உபாஸகன்.
யினாலும்
எதிர் நீச்சலே போடுபவன் .
காரணம் ,அவன்
உண்மையின்
பின் பக்கத்தைப்
பார்த்து விட்டவன் .
அதனால்
சிறையிலிருந்து
விடுதலை அடைந்தவன் .
அவன்
இருளால்
ஒளி பெற்றவன் .
மர்மங்களின் ரசிகன் .
அதனால்
இருளிலிருந்து ஒளிக்கு
என்ற
முழக்கத்திற்கு எதிராக
ஒளியிலிருந்து இருளுக்கு
என்று முழங்குபவன் .
உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன் .
அவன்
புறப்படுகிறவன் அல்லன்:
திரும்புகிறவன் .
‘இல்லை ‘யின்
தூதுவன் நான் .
‘இல்லை ‘ என்
மகாவாக்கியம் .
‘இல்லை ‘ என்
ஒற்றைச்சொல் வேதம் .
சீழ் நிரம்பிய
கொப்புளங்களை
முலை என்று சப்பும்
குழந்தைகளைப்
பரிகசிப்பவன் .
தீபங்களை
ஏற்ற அல்ல :
அணைக்க வந்தவன் .
எழுப்ப அல்ல
உறங்க வைக்க
வந்தவன்.
அவன் தேனீ :
அதனால்
எல்லாப் பூக்களிலும்
வித்தியாசம் பார்க்காமல்
தேன் எடுப்பவன் .
எந்த கூண்டிலும்
அடைபடாதவன் .
உண்மைக்குப்
பல முகங்கள் உண்டு
என்பதை அறிந்தவன் .
அத்தனை முகங்களுக்கும்
முத்தம் தருபவன் .
முரண்கள்
கள்ளக் காதலர்கள்
என்பதை கண்டுபிடித்தவன் .
அவன்
போதிக்க வரவில்லை :
போதனைகளால்
நிராகரிக்கப்பட்ட
அனாதை குழந்தைகளை
எடுத்து கொஞ்ச
வந்திருக்கிறான் .
உப்கள் கல்லடிக்கு
அவன் காத்திருக்கிறான் .
ஏனெனில் அதுதான்
அவனுக்கு அங்கீகாரம் .
பித்தனுக்காக கரு
எண்பதுகளில் தோன்றியது .
குங்குமம் பித்தனைத்
தொடராக வெளியிட்டது.
பிறகு சில கவிதைகளை
எழுதிச் சேர்த்தேன் .
வழக்கம் போலவே
என்னுடைய இந்தத்
தொகுதியும்
தாமதமாக வெளிவருகிறது .
~அப்துல் ரகுமான் ~
(19.07.1998) அன்று நிகழ்ந்த
கவிக்கோ” அப்துல் ரகுமானின் மணி விழாவில் “மாண்புகு முதல்வர் கலைஞர்” ஆற்றிய உரையிலிருந்து.
ரகுமான் அவர்கள்
எழுதிய “பித்தன் “ என்ற நூலிலே சில கவிதை வரிகளை உங்களிடத்தில் எடுத்துக்
காட்டுவதை நான் பெருமையாக கருதுகிறேன் .
பித்தன் ஆடையை கிழித்துக் கொண்டிருக்கிறான் .அவனுடைய செயலைப்
பார்த்து ரகுமான் கேட்டிருக்கிறார் .
சட்டையை ஏன்
கிழிக்கிறாய் ?
என்றேன் .
அதற்கு பித்தன்
சொல்கிறான் –
கடிதத்தைப்
படிக்கவேண்டும்
என்றால் உறையைக்
கிழிக்கத்தானே வேண்டும்
“
என்கிறான் .எவ்வவளவு
அருமையான தத்துவம் இதிலே அடங்கியிருக்கிறது என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்து
கொள்ளாலாம் . மேலும் பித்தன் தொடருகிறான் .
ஆடை
அணிவதில்லையே ?
நீங்கள் ஆபாசமானீர்கள்,
அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள் .
மனிதர்கள் ஆபாசமானவர்களாம்-பூக்களும் பறவைகளும்
ஆபாசமர்ரவைகளாம் –இவ்வாறு சொல்லிவிட்டு மேலும் சொல்கிறான்.
தேங்கிய நீர்தான்
பாசியை
உடுத்திக் கொள்கிறது .
தேங்கிய நீரிலே பாசி படிகிறதே ,அதைத் தான் கவிஞர் பித்தன்
வாயிலாக ஆடை என்று சொல்கிறார்.
தோல் கூட ஆடைதான் என்பதை பாம்பு அறிந்திருக்க்கிறதாம்
.இந்த ஆடை என்பது –நான் முதலிலே
குரிப்ப்பிட்டேனே -தேங்கிய நீர் தான் பாசி பாசியை உடுத்திக் கொள்கிறது என்று .அதைப்
போலப் பாலைக் கூட சூடாக்கி காய்ச்சி ஆற வைத்தால் ,மேலே ஆடை உருவாகிறது .அதை ஆடை
என்கிறோம் .அந்த ஆடையைக் கொண்டு வந்து தேங்கிய நீரில் திணிக்கிறார் கவிஞர் அப்துல்
ரகுமான் அவர்கள் .அது கூடப் பாசியை உடுத்திக்
கொள்கிறது .
இந்தப் என்ற கவிதை தொகுப்பு முழுவதையும்
படித்துப்பார்த்தால் –எனக்கு தோன்றுகின்ற எண்ணம் , அவரே முன்னுரையிலே
குறிப்பிட்டது போல எதிர்மறையாக எல்லாவற்றையும் சொல்வது என்கிற முடிவோடு
சொல்லப்பட்ட விஷயங்கள் . எதிர்மறை உடன்பாடு என்பதில் எதிர்மறையாகச் சொல்லப்பட்டவை .
“பாசிட்டிவ்” “நெகட்டிவ்“ என்று ஒன்றாகச் சேர்த்தால் தான் ஒளியே
கிடைக்கும் .முதலில் “நெகட்டிவ்“ தயாராகிறது :பிறகு பாசிட்டிவாக படமாக உருப்பெருகிறது .அதை மனதில் வைத்துக் கொண்டு பார்த்தால் எல்லாம்
பாசிட்டிவ்விலேயே –அந்த அணுகு முறையிலேயே பித்தனுடைய கவிதைகள் வெளியாகிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்.
அனாதை என்ற
தலைப்பில் –
யார் அந்த
அனாதை ?என்று
கேட்டேன்
கவிஞர் கேட்கிறார்
–அதற்கு பித்தன் சொல்கிறான்.
“உண்மை “ என்றவன்
,
அந்த அனாதை
என்பவன் உண்மையாம் .
கடைத்தெருவில்
அது அனாதையாக
அழுது
கொண்டிருத்தது
அதை யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளவில்லை
என்று கூறினான்.
ஏன் ? என்றேன்
நெற்றியில் திருநீரோ
,
நாமமோ இல்லை ,
மார்பில்
சிலுவை இல்லை ,
தலையில்
தொப்பியில்லை
அதனால் அதை
யாருமே அடையாளம்
கண்டுகொள்ளவில்லை ‘
என்றான்.
அடையாளம்
கண்டுகொண்டிருந்தால் அயோத்திப் பிரச்சனை அல்லவா வரும் ? எனவே இது நெகடிவ் அப்ரோச்
–எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டு ,ஒரு பாசிடிவ் அப்ரோச்சுக்குக் கவிஞர் அப்துல் ரகுமான்
அவர்கள்
இவைகள் எல்லாம் இருந்தால்கூட எல்லோரும் ஒன்றுதான் என்பதை நிலை நாட்டுவதற்காக அதைச்
சொல்கிறார்.
இப்போது கூட பாருங்கள் .இந்த ஒரு காலத்தில் நான் கலந்துகொண்ட விழாக்களில்
முதலில் கலந்து கொண்டது திருநாவுக்கரசு அவர்களின்
பொன் விழா .
நேற்று கலந்துகொண்டது நம்முடைய கிறித்துவப் பேராயர் எஸ்ரா சற்குணம்
அவர்களின் மணி விழா .
இன்று நான் கலந்துகொள்கிற விழா கவிஞர்
அப்துல் ரகுமானின் மணி விழா.
இந்து –கிறித்துவர் –முஸ்லிம் என்ற இந்த மூன்று விழாகளிலே கலந்து கொள்கிறேனே இது அடையாளம் தெரிந்தாலும் கூட எல்லா வற்றிலும்
நானே கலந்து கொள்வதிலிருந்து எல்லாமே ஒன்று தான் .
இந்துவாக இருந்தாலும்
கிறித்துவராக இருந்தாலும்
இந்து முஸ்லிம் சீக்இ சாயி. ஆபஸ் மே
ஹை பாயி ,பாயி என்பார்களே அந்தப் பாடலை உள்ளடக்கிய அந்த உணர்வை எடுத்துக்காட்டத்தான் நெகட்டிவ் அணுகுமுறையிலே
கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் ஒரு
பாசிட்டிவ் செய்தியை நமக்கு சொல்கிறார்.
‘பக்கவாதம் “
எனும் ஒரு தலைப்பு .அதிலே ,ஓர் அருமையான தத்துவம்.
ஒன்றை
நல்லது
என்றீர்கள்
ஒன்றைக் கெட்டது என்றீர்கள் ,
இது குருட்டுத்
தீர்ப்பல்லவா என்று பித்தன் கேட்கிறான் .
உங்கள் தீர்ப்பு
உண்மையில்
தீர்ப்பல்ல
ஒரு பக்க வாதம்
ஒன்சைடு
ஆர்க்யூமெண்டாம்-தமிழிலே ஒரு வாதம் : நிறுத்தி சொன்னால் ஒரு பக்கவாதம்.
போர்வையைக்
குளிர்காலத்தில்
நல்லது என்கிறீர்கள்
கோடைக்காலத்தில்
கெட்டது என்கிறீர்கள்
போர்வையில் இல்லை
நல்லதும் கெட்டதும்
விசிறியைக்
கோடைக்காலத்தில்
விரும்புகிறீர்கள்
குளிர்காலத்தில்
வெறுக்கிறீர்கள்
விசிறியிடம் இல்லை
விருப்பும் வெறுப்பும் .
மழை பெய்தால்
குடியானவன் போற்றுகிறான்
குயவன் தூற்றுகிறான்
மழையிடம் இல்லை
பாரபட்சம்
இது நல்லது
இது கெட்டது
என்று பிரிப்பதற்கு
நீங்கள் கீறும் கோடும்
ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா ?
எவ்வளவு அருமையான உவமை பாருங்கள் !
நல்லது கெட்டது என்ற இரண்டு சொல்லுக்கிடையில் –இந்த இரண்டு தன்மைக்கு இடையிலே
இருப்பது பெரிய இடைவெளி அல்ல.
மிகச் சிறிய இடைவெளிதான்.
ஓர் இழை போன்ற இடைவெளிதான் என்று சொல்ல வந்த கவிஞர் இந்த இடைவெளி
பெரிய அகழி என்று சொல்லவில்லை .
சிறிய வாய்க்கால் என்று சொல்லவில்லை.
பிறகு என்ன சொல்கிறார் ?
நல்லது கெட்டது என்று பிரிப்பதற்கு நீங்கள் கீறும் கோடும்
ஓடும் நீரில் கிழிக்கும் கோடல்லவா ?
ஓடுகின்ற நீரில் கோடு கிழித்தால் எவ்வளவு நேரம் தாங்கும் அது ?
கிழிக்கும் போதே இரண்டும் ஒன்றாகி விடும் .
அந்த அளவிற்கு மெல்லிய இடைவெளி தான்.
நல்லது கெட்டது என்ற இந்த இரண்டு தன்மைகளுக்கு இடையே இருக்கிறது என்கிறார் .
மற்றொன்று எதையெதை நாம் சசிக்க மாட்டாமோ,அதையெல்லாம் பித்தன் ரசிக்கிறான்.
பித்தனா ரசிக்கிறான் ?
பித்தன் என்ற பெயரில் அப்துல் ரகுமான் ரசிக்கிறார் –காயங்களை ரசிக்கிறார் .
காயங்களை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
இருட்டின் உடலில்
இந்த
நட்சத்திர காயங்கள்
எவ்வளவு அழகாக
இருக்கின்றன
என்றான் .
பித்தன் என்ற மனசாட்சி ரகுமானிடம் இவ்வாறு கூறுகிறது .
மற்றொறு அழகான அருமையான சிந்திக்கத் தக்க நினைத்து நினைத்துப் பாராட்டத்தக்க
ஒன்று .
காயம்படும் ஓலைதான்
சுவடியாகிறது
எழுத்தாணியால் சுவடியாகிறது
காயம்படும்
கல்தான்
சிலையாகிறது
உளியினால்
காயம்படும்
மூங்கில் தான்
கானம் பாடுகிறது
காயத்திற்கு
இப்படி வக்காலத்து வாங்குகிறார் .
அடுத்து பாரம் :
பாரம் என்றால்
எல்லோரும் வெறுப்பார்கள் .இந்தப் பாரத்தை தூக்கிக்கொண்டு போ என்று சொன்னால் ஒரு
சலிப்பு வரும் .
ஆனால் பித்தன்
சொல்கிறான் .
பாரத்தை
இறக்கி வைப்பது
மகிழ்ச்சியானது
என்கிறீர்கள்ஆனால்
மரணத்தில்
அழுகிறீர்களே ,ஏன் ?
உயிர் பாரம்
என்கிறோம் .உடம்பு சுமை என்கிறோம் .சரி இதைப் பெரிய பாரம் என்று சொல்லுகின்ற நீ
மரணம் என்றவுடன் அழுகிறாய் ? அது தான் சுமை இறங்கி விடுகிறதே .
இப்படி இந்த
பித்தனுடைய உவமைகளை ,கவிதைகளை , தத்துவங்களையெல்லாம்
படித்துப் படித்து நானே அப்துல் ரகுமானின் பித்தனாகவே ஆகி விட்டேன் என்பதை ராஜாஜி
மண்டபத்தில் நான் அறிவிக்கின்றேன் .
அம்பலம்
பித்தன் -கவிக்கோ (16-17)
ஆடை
பித்தன்
தன் சட்டையைக்
கிழித்துக்கொண்டிருந்தான்
சட்டையை ஏன்
கிழிக்கிறாய் ? என்றேன் .
கடிதத்தைப்
படிக்கவேண்டும்
என்றால் உறையைக்
கிழிக்கத்தானே வேண்டும்? “என்றான்
அவன் மேலும் சொன்னான் :
நான் ஆறிவிட்டேன் .
எனவே
இனிமேல் எனக்கு
இந்த காரச் சீலை
தேவையில்லை .
பொய்க்குத்தான்
ஆடை தேவை .
“மெய்” க்குத்
தேவையில்லை .
உங்கள் ஆடை
விலக்கப்பட்ட கனியைத்
தின்ற பாவத்தால்
நெய்யப்பட்டதல்லவா ?
உங்கள் ஆடை
இறந்து போன
கள்ளமின்மைக்குப்
போர்த்திய
சவக்கோடி அல்லவா ?
பூக்களும் பறவைகளும்
ஆடை அணிவதில்லையே ?
நீங்கள்
ஆபாசமானீர்கள் :
அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள் .
ஆடையை
முகவரி ஆக்கியபோது
நீங்கள் காணாமல் போனீர்கள்.
உங்கள் ஆடைகளை
ஒப்பனை அறையிலிருந்தே
பொறுக்கிக் கொள்கிறீர்கள் .
தேங்கிய நீர்தான்
பாசியை
உடுத்திக்கொள்கிறது .
அணைந்த நெருப்புத்தான்
சாம்பலை
அணிந்து கொள்கிறது
தோலும் ஆடைதான் என்பதைப்
பாம்பு அறிந்திருந்தத்து
நீங்கள் அறியவில்லை.
அர்த்தம்
வார்த்தையை
உடுத்திக்கொள்வதைப் போல்
உங்களால் உடுக்க
முடியவில்லை .
பித்தன்
-கவிக்கோ (20-21)
சுவர்
பித்தன்
சுவரில்
கிறுக்கிகொண்டிருந்தான் .
“நான்
சுவரில் எழுதாதே “
என்ற வாசகத்தைச்
சுட்டிகாட்டினேன் .
சுவரில் தானே
எழுத முடியும்
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான் :
வாசலும்
சாளரங்களும்
சுவர் எழுத்துக்கல்தாமே ?
என் கிறுக்கல்களும்
உங்களுக்கு
வாசலும் சாளரமுமாக
இருக்கும் .
எழுத்துக்கள் என்பதென்ன ?
அங்கீகரிக்கப்பட்ட
கிறுக்கல்கள்தாமே ?
இறைவன்
பூமியைச்
சுவராக
படைத்ததே
நம்மை கிறுக்கத்தானே ?
சூரியன்
தினமும்
வெள்ளையடித்தாலும்
இரவு நட்சத்திரங்களைக்
கிறுக்கிகொண்டுதான்
இருக்கும் .
சூரியனின்
சுண்ணாம்பை விட
நட்சத்திரக் கிறுக்கல்கள்
அழகானதல்லவா ?
என் கிறுக்கல்கள்
நட்சத்திரங்களாகும் .
மின்னல்
கிறுக்கலால்
வானச் சுவர்
பிரகாசிக்கிறதே .
என் கிறுக்கல்கள்
மின்னலாயிருக்கும் .
கனவுகள்
தூக்கச் சுவரின்
கிறுக்கல்கள்தாமே?
நானும்
உங்கள் தூக்கங்களின் மீது
கிறுக்குகிறேன் .
என் கிறுக்கல்கள்
கனவுகளாயிருக்கும் .
உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல் என்கிறீர்கள்.
எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன் .
பித்தன்
-கவிக்கோ (24-25)
பிரளயம்
நீ சீர்திருத்தவாதியா
?
என்று கேட்டேன் .
இல்லை :நான்
திருத்துவதற்காக அல்ல ,
சங்காரத்திற்காக
வந்திருக்கிறேன்
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான் :
குப்பைகளை எப்படிச்
சீர்திருத்துவது ?
நான் கூட்டித் தள்ளவே
வந்திருக்கிறேன் .
இல்லை
என் துடைப்பம் .
உங்கள் ஆபாசமான
உண்டு களை எல்லாம்
மறுக்கவே வந்திருக்கிறேன்
.
‘இல்லை ‘யின்
தூதுவன் நான் .
‘இல்லை ‘ என்
மகாவாக்கியம் .
‘இல்லை ‘ என்
ஒற்றைச்சொல் வேதம் .
போதிக்க அல்ல .
உங்களுக்குப்
போதிக்கப்பட்டத்தை
அழிக்கவே வந்திருக்கிறேன்
.
நினைவூட்ட அல்ல ,
உங்களுக்கு
மறதியைத்
தரவே வந்திருக்கிறேன் .
உங்கள் நினைவுகள்
இறந்த காலத்துக்
குப்பைகளாகவே
இருக்கின்றன .
ஒளியைத் தர அல்ல ,
உங்களுக்கு
இருளைத் தரவே
வந்திருக்கிறேன் .
மூர்க்கத்தனமான ஒளியில்
உங்கள் நட்சத்திரங்கள்
மங்கிப் போய்விட்டன .
விழிப்பைத்தர அல்ல ,
உங்களுக்கு
உறக்கத்தைத் தரவே
வந்திருக்கிறேன்
.
உங்கள்
பார்வையற்ற விழிப்பில்
உங்கள் கனவுகளை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
வழிகாட்ட அல்ல ,
உங்களை
வழிமறிக்கவே
வந்திருக்கிறேன் .
உங்கள்
பார்வைகள் எல்லாம்
மயானத்திற்கே செல்கின்றன .
நிலாவின்
ஒளிப் பக்கத்தையே
பார்த்துக்
கொண்டிருப்பவர்களுக்கு
அதன்
இருண்ட பக்கத்தையும்
காட்டவே வந்திருக்கிறேன் .
இருண்ட பக்கமும்
சேர்ந்துதான் நிலா :
அதுவும் அழகானதே
என்பதை
உணர்த்தவே வந்திருக்கிறேன்
.
உங்கள் எடைக் கற்களை
எடை போடவே
வந்திருக்கிறேன் .
உங்கள் பீடங்கள்
சமாதிகள் என்று
காட்டவே வந்திருக்கிறேன் .
மழையாக அல்ல ,
பிரளயமாகவே
வந்திருக்கிறேன் .
அது
நோவாவின் பேழையையும்
மூழ்கடிக்கும் .
பித்தன்
-கவிக்கோ (27-28)
அனாதை
அனாதையை ஆதரிப்பார்
யாருமில்லையா ?என்று
பித்தன்
கடைத்தெருவில்
கூவிக்கொண்டிருந்தான் .
யார் அந்த
அனாதை ? என்று கேட்டேன்
“உண்மை “ என்றவன் ,
கடைத்தெருவில்
அது அனாதையாக
அழுது கொண்டிருத்தது
அதை யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளவில்லை
என்று கூறினான்.
ஏன் ? என்றேன்
நெற்றியில் திருநீரோ ,
நாமமோ இல்லை ,
மார்பில்
சிலுவை இல்லை ,
தலையில்
தொப்பியில்லை
அதனால் அதை
யாருமே அடையாளம்
கண்டுகொள்ளவில்லை ‘
என்றான்.
நீ மட்டும் எப்படி
அடையாளம் கண்டுகொண்டாய் ?
என்று கேட்டேன் .
யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளாததிலிருந்து
அதை நான்
அடையாளம் கண்டுகொண்டேன் .
மேலும்
அதன் உடலில்
சிலுவை அறையப்பட்ட
காயங்களும் ,கு
ண்டுகளும்
இருந்தன .
கழுத்தில்
தூக்கு கயிற்றின்
வடு இருந்தது .
அதன் உதடுகள்
விஷத்தால்
கறுத்திருந்தன .
அதனாலும்
அடையாளம்
கண்டுகொண்டேன்
என்றான்.
வினா
நீ விடைகளைத்
தேடுகிறவனா ? என்று
பித்தனைக் கேட்டேன் .
‘இல்லை :நான்
வினாக்களின் காதலன் ‘
என்றான்.
அவன் மேலும் சொன்னான் :
ஒன்றுமற்ற சூனியத்தில்
வினாக்களே
படைப்புகளாக உதித்தன .
பரிணாமப் பாதையில்
வினாக்களே
நம் கால்களாக
இருந்தன.
விடைகள்
நாம் சிறிது நேரம்
தங்கி இளைப்பாறும்
சத்திரங்களே .
வினாக்களே
நம்மை எழுப்புகின்றன .
விடைகளோ
உறக்கமாய் இருக்கின்றன .
வினாக்கள்
நம்மைத் திறக்கின்றன :
விடைகளோ
நம்மை மூடுகின்றன .
வினாக்கள்
விளக்குகளாகவும்
விடைகள்
இமைகளாகவும் இருப்பதை
நீங்கள் அறியவில்லையா ?
வினாவின் வெயிலுக்கு
உங்கள் விடைகள்
வெறும் குடைகளே
என்பதை அறிவீர்களா ?
விடைகளால்
வினாக்கள் சாவதில்லை :
அவை
விடைகளைத் தின்று
வளர்கின்றன .
உங்கள் விடைகளிலும்
வினாக்களின் கர்ப்பம்
இருப்பதை
நீங்கள் அறிவீர்களா ?
ஒவ்வொரு வினாவும்
பூவாய் மலர்கிறது :
அறிவு அதில்
தேன் உண்ணுகிறது .
விடைகளுக்கு
மரணம் உண்டு .
வினாக்களுக்கு இல்லை .
பிரபஞ்ச மர்மத்தின்
கதவுகளுக்குச்
சாவிகளாக இருப்பவை
வினாக்களே :
விடைகள் அல்ல .
வாழ்க்கை தேர்வில்
வெற்றி பெறுபவர்கள்
விடைகளை அறிந்த்தவர்கள்
இல்லை :
வினாக்களை அறிந்தவர்களே .
பித்தன்
-கவிக்கோ (32)
அறிக்கை
உன் கொள்கை என்ன ?
என்று பித்தனிடம் கேட்டேன் .
‘கொள்கையின்மை’
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான் :
ஒரு கொள்கையை
ஏற்பவன்
கூண்டில் அடைபட்டுவிடுகிறான்
.
நான்
கூண்டில் அடைபடும்
பறவை அல்ல :
அது தங்கக் கூண்டாக
இருந்தாலும் சரி .
கூண்டுப் பறவை
கூண்டின் கூரையையே
வானம் என்று வாதாடும் .
சிறகு
சுமை என்று
சொல்லும் .
தத்துவங்கள் எல்லாம்
ஒரு மகா வாக்கியத்தின்
உரைகளே .
ஓர் உரையை மட்டும்
ஏற்பவன்
உண்மையின் பல
பரிணாமங்களைக்
காணாமல் போய்விடுவான் .
மதவாதி
என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது
என்கிறான் .
நானோ தேனீயாக
இருக்கிறேன் .
பூக்களின் வேறுபாடுகளைத்
தேனீ
இலட்சியம் செய்வதில்லை .
தோட்டத்து வேலிகள்
அதைத் தடுப்பதில்லை .
எல்லாப் பூக்களிலும்
தேன் உண்டு
என்பதும்
தேன் என்பது ஒன்று தான்
என்பதும்
தேனீக்கு மட்டுமே
தெரிகிறது.
ஒரு பூவின் தேன்
தேனீக்குப் போதாது .
நான் எப்போதும்
நிரம்பாதவனாக
இருக்கிறேன் .
சமுத்திரத்தைப் போல ,
அதனால்
ஜீவ நதிகள் என்னிடம்
வந்து கொண்டே இருக்கின்றன .
எந்த உருவத்தையும்
பதித்துக்கொள்ளாமலிருக்கிறேன்
.
கண்ணாடியைப் போல ,
அதனால்
எல்லா வடிவங்களின்
அழகையும் நான்
ரசிக்கிறேன் .
என்னை
முழுவதும் திறந்து
காட்டாதவனாக இருக்கிறேன் .
இரவைப் போல .
அதனால்
நட்சத்திரங்களும்
விளக்குகளும்
தணியாத ஆர்வத்தோடு
என்னை
தினமும் பார்க்கின்றன .
எனக்குள்
இருப்பதையெல்லாம்
பேசி விடாமல் இருக்கிறேன் :
வீணையைப் போல ,
அதனால்
மீண்டும் மீண்டும் நான்
மீட்டப்படுகின்றேன் .
என்னிடம்
மலர்வதையும்
கனிவதையும்
நான் ஒரே நேரத்தில்
கொடுத்து விடுவதில்லை :
மரத்தைப் போல .
அதனால் நான்
எதிர்பார்ப்போடு
நீருற்றப்படுகிறேன் .
முழுவதும்
புரிந்துகொள்ளப்பட
முடியாதவனாக இருக்கிறேன்
.கனவைப் போல ,
அதனால்
நான் யாருக்கும்
சலிப்பதில்லை .
நான் எல்லாவற்றையும்
புரிந்துகொள்ள முயல்வதில்லை .
புரிந்து கொள்ளப்பட்டவை
சுவாரஸ்யம் அற்றுப்போகும் .
நான் மர்மங்களின் ரசிகன்.
நான் ஆசைப்பட்டதை எல்லாம்
அடைந்துவிட வேண்டும்
என்று நினைப்பதில்லை ,
அதனால் என்
ஜீவ நெருப்பு
அணையாமல் இருக்கிறது .
நான் எப்போதும்
முடிக்க்கப்பட
முடியாதவனாக
இருக்கிறேன் :
இறைவனைப் பற்றிய
விவாதத்தைப் போல ,
அதனால் நான்
இருந்துகொண்டே இருப்பேன் .
பித்தன்
-கவிக்கோ (34-37)
பக்கவாதம்
நீதி தேவைதையின்
சிலையைப் பார்த்துப்
பித்தன் சிரித்தான்.
ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன் .
உங்கள்
நீதி தேவதை மட்டுமல்ல ,
அவளுடைய தீர்ப்புகளும்
குருடாகவே இருக்கின்றன ‘
என்றான் பித்தன்.
அவன் மேலும் சொன்னான் :
ஒன்றை
நல்லது என்கிறீர்கள் :
ஒன்றை கெட்டது என்கிறீர்கள்.
இது குருட்டுத் தீர்ப்பல்லவா ?
உங்கள்
விருப்பும் வெறுப்பும்
நீதிபதிகளாக இருக்கின்றன .
காலமும் ,இடமும்
சந்தர்ப்ப சாட்சிகளாக
இருகின்றன .
உங்கள் தீர்ப்பு
உண்மையில் தீர்ப்பல்ல .
ஒரு பக்க வாதம்.
இந்தப்
பக்க வாதங்களால்
நீங்கள்
முடங்கிப் போகிறீர்கள்.
காலம் மாறும்போது
உங்கள் தீர்ப்பும்
மாறிவிடுகிறது .
போர்வையைக்
குளிர்காலத்தில்
நல்லது என்கிறீர்கள்
கோடைக்காலத்தில்
கெட்டது என்கிறீர்கள்
போர்வையில் இல்லை
நல்லதும் கெட்டதும் .
விசிறியைக்
கோடைக்காலத்தில்
விரும்புகிறீர்கள்
குளிர்காலத்தில்
வெறுக்கிறீர்கள்
விசிறியிடம் இல்லை
விருப்பும் வெறுப்பும் .
மழை பெய்தால்
குடியானவன் போற்றுகிறான்
குயவன் தூற்றுகிறான்
மழையிடம் இல்லை
பாரபட்சம்.
காற்று வீசினால்
அகல்விளக்கு
அணைந்து விடுகிறது
.தீக்குண்டம்
கொளுந்துவிட்டு
எரிகிறது .
காற்றிடம் இல்லை
பகையும் நட்பும்.
பாடலில்
பரவசமடைகிறீர்கள் .
வசவில் வருந்துகிறீர்கள்
இரண்டும்
ஒரே சப்த சாகரத்தின்
அலைகளே .
நெருப்பு
நல்லதா ? கெட்டதா?
நெருப்பு
நெருப்பாக மட்டுமே
இருக்கிறது .
நீங்கள்தான் அதை
நல்லதாகவோ
கெட்டதாகவோ
ஆக்கிக்கொள்கிறீர்கள் .
எது பூவானதோ
அதுவே முள்ளானது .
பூவைப் போலவே
முள்ளுக்கும்
இருத்தல்
நியாயம் உண்டு .
உங்களைக்
குத்துவதற்காக
முளைத்ததல்ல முள்.
நீங்கள்தான்
குத்திக்கொள்கிறீர்கள் .
இது நல்லது
இது கெட்டது
என்று பிரிப்பதற்கு நீ
ங்கள் கீறும் கோடு
ஓடும் நீரில்
கிழிக்கும் கோடல்லவா ?
நீங்கள்
தவறு என்று தள்ளும்
பொய்
ஓர் உயிரைக்
காப்பாற்றும்போது
புகழப்படுவதில்லையா ?
நீங்கள் குற்றமென்று கூறும்
கனவு
காதலர்களிடம்
அழகாகிவிடுவதில்லையா ?
நீங்கள்
இழிவானது என்று இகழும்
பாலுணர்வு
தாலியால்
புனிதமடை வதில்லையா ?
நீங்கள்
பாவமென்று பழிக்கும்
கொலை
போர்க்களத்தில்
வீரம் என்று
பாராட்டப்படுவதில்லையா ?
எப்போதும் கெட்டது என்று
எதை விலக்குவீர்கள் ?
கெட்டது என்றாலே
நல்லது
கெட்டுவிட்டது என்றுதான்
பொருள் .
வரம்பைத்
தெரிந்து கொள்ளுங்கள் .
அங்கேதான்
இந்த விபத்து நிகழ்கிறது .
நல்லதான் மிகையே கெட்டதாகிவிடும்.
சாலை விதிகளைப் போலவே
இயற்கையிலும் விதிகள் உண்டு .
அந்த விதிகளுக்கு
இசைந்து நடப்பவன் பத்திரமாக இருக்கிறான் .
மீறுகிறவன்
விபத்துக்கு ஆளாகிறான் .
பாலாவதும்
சீழாவதும்
ஒரே ரத்தம் தான் .
முலையாவதும்
புண்ணாவதும்
உங்கள் கையில்
இருக்கிறது .
பித்தன் -கவிக்கோ (39-42)
சிதறு தேங்காய்
சிதறு தேங்காயைப்
பொறுக்கிக் கொண்டிருந்தவனைத்
தடுத்து நிறுத்தினான் பித்தன் .
அவனை ஏன் தடுக்கிறாய் ?
என்று கேட்டேன் .
நீங்கள் உங்களைப்
பொறுக்க வேண்டியிருக்கத்
தேங்காயைப்
பொறுக்கி கொண்டிருக்கிறீர்களே
என்றான் பித்தன்
அவன் மேலும் சொன்னான் :
நீங்கள் உடைந்து
துண்டு துண்டாகிப்
போனதை உணரவில்லையா ?
வீட்டிலும் வெளியிலும்
நீங்கள்
சிதறிக் கிடப்பதை
அறியவில்லையா ?
மனமும்
வயிறும் உடைக்க
நீங்கள் ஒருவரே
எத்தனை துண்டுகளாகிவிட்டீர்கள் !
உங்கள் துண்டுகளுக்கிடையே
ஓயாத போர் நடக்கிறது .
ஒவ்வொரு துண்டிலும்
நீங்கள்
வெவ்வேறாக இருக்கிறீர்கள் .
உங்களை பிரதிபலிக்கும்
கண்ணாடிகளால்
உங்கள் பிம்பங்களும்
உடைந்து போகின்றன .
நீங்கள்
கடைத் தேங்காயாக
இருக்கிறீர்கள் .
வழிப் பிள்ளையாருக்காக
உடைக்கப்படுகிறீர்கள் .
சிதறிக்கிடக்கும் உங்களை
யார் யாரோ பொறுக்கிச்
சாப்பிடுகிறார்கள் .
உடைந்து
சிதறிக் கிடப்பவர்களே !
உங்களை எப்படிப்
பொறுக்கப் போகிறீர்கள் ?
அப்படியே பொறுக்கினாலும்
சிந்திப் போன
உங்கள் நீரை
எப்படி சேகரிப்பீர்கள்
பித்தன் -கவிக்கோ (44)
பயணம்
பித்தன்
பின் பக்கமாக
நடந்துகொண்டிருந்தான் .
என்ன செய்கிறாய் ?
என்று கேட்டேன் .
திரும்புகிறேன் என்றான் .
அவன் மேலும் சொன்னான் :
புறப்படுதல் அல்ல ,
திரும்புதல் தான் பயணம் .
வெளியே புறப்படுதல் அல்ல ,
வெளியிலிருந்து புறப்படுதல்தான்
பயணம் .
நீங்கள்
உங்களிடமிருந்து புறப்படுகிறீர்கள் .
அதனால்தான் நீங்கள்
ஊர்போய்ச் சேர்வதில்லை .
உங்களை
நோக்கிப் புறப்படுங்கள் .
அதுதான் பயணம் .
மூட்டை முடிச்சுகளோடு
புறப்படாதீர்கள் .
அவற்றை
துறப்பதற்குத்தான் பயணம் .
இறைவனைத் தேடிப்
புறப்படாதீர்கள்.
அவன் காணாமல்
போன பொருள் அல்ல.
உங்கள்
சுயத்தை நோக்கிப்
புறப்படுங்கள் .
அங்கே இறைவன்
உங்களுக்காகக்
காத்திருக்கிறான் .
சுயத்தை நோக்கிப்
புறப்பட கூட
வேண்டியதில்லை .
ஏனென்றால்
நீங்கள்
அங்கே தான்
இருக்கிறீர்கள் .
இதை அறிவதுதான்
பயணம் .
சுயமும்
இலட்சியமல்ல :
சத்திரம்தான்
கடைசிச் சத்திரம் .
அடைவதற்கல்ல ,
அழிப்பதற்குத்தான்
பயணம் .
இடத்தின் மீது
நடப்பதல்ல ,
காலத்தின் மீது
நடப்பதுதான் பயணம் .
நினைவிருக்கட்டும்
பயணம் என்பது
கால்களால் நடப்பதல்ல .
நீங்கள் விளக்காய் இருங்கள் .
உங்கள் ஒளி
பயணம் செய்யட்டும் .
பூக்களே!
விதைக்குத் திரும்புங்கள் .
உங்கள் பயணம்
உங்கள் பாதையில்
நடக்கட்டும் :
மற்றவர்கள் போட்ட
பாதையில் அல்ல .
நதியின் பாதையைப்போல்
உங்கள் பாதை
உங்கள் பயணத்தால்
உண்டாகட்டும் .
பறவையின்
பாதையைப் போல்
உங்கள் பாதை
சுவிடற்றதாக இருக்கட்டும் .
சுவடுகளை பதிப்பது
பயணமல்ல .
பயணத்தின் மதிப்பு
நீங்கள்
எங்கிருந்து
புறப்படுகிறீர்கள்
என்பதில் இருக்கிறது .
தொட்டிலிலிருந்து
புறப்படுகிறவன்
பாடையை அடைகின்றான் .
நீங்கள்
பாடையிலிருந்து
புறப்படுங்கள் .
வில்லிருந்து
புறப்படாதீர்கள் .
பூவிலிருந்து புறப்படுங்கள் .
உங்கள் பயணம்
சப்தத்திலிருந்து
மௌனத்திருக்குச் செல்லும்
இசையைப் போல் இருக்கட்டும் .
பித்தன் -கவிக்கோ (46-48)
அவதாரம்
எல்லோரும்
மலையின் மீது
ஏறிக்கொண்டிருந்தபோது
பித்தன் மட்டும்
கீழே
இறங்கி கொண்டிருந்தான் .
நீ ஏன்
இறங்கி கொண்டிருக்கிறாய் ?
என்று கெட்டேன் .
மேலே செல்வதற்காக
என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
கீழே விழும்
விதை தான்
மேலே செல்கிறது .
ஏற்றம்
இறக்கத்தில்தான்
நீரை முகக்கிறது .
தராசில்
கனமான தட்டே
கீழே இறங்குகிறது .
அரியாசனத்தில்
ஏறுகிறவனுக்கல்ல:
இறங்க்குரவனுக்கே
இதிகாசம் கிடைக்கிறது .
இறங்கும் பூமியின்
மேகமே
தாகம் தீர்க்கிறது .
பறக்கும் போதல்ல :
அறுந்து விழுந்த பிறகே
பட்டத்திற்கு
அமைதி கிடைக்கிறது .
ஆரோகொனத்தில் அல்ல ,
அவரோகணத்தில் தான்
ஸ்வரங்கள்
கூட்டை அடைகின்றன .
இறங்குவது பரவசம் :
அதனாலல்லவா
அருவி பாடிகிறது ?
பறப்பவன்
முடியைக்
காணாமல் போகலாம் .
இறங்குபவன் அடியைக்
கண்டுவிடுகிறான் .
பழுத்த கனியே
கீழே இறங்கும் .
மேலே என்பது
மேலே இருக்கிறது
என்பது தான்
உங்கள்
பெரிய மூடநம்பிக்கை .
பித்தன்
-கவிக்கோ (50-51)
இருள்
எல்லோரும்
விளக்கேற்றும் அந்தியில்
பித்தன் விளக்கை
அணைத்தான் .
விளக்கை ஏன் அனைத்தாய் ?
என்று கேட்டேன்.
பார்ப்பதற்கு என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
காதலி
வெளிச்சத்தில்
தன்னை வெளிப்படுத்தமாட்டாள்.
கடவுளும் அப்படியே .
ஆதியும் இருள் :
அந்தமும் இருள் .
இருளில் இருக்கும்போது
நீங்கள்
இரண்டையும் அறிகிறீர்கள் .
இருள்
அண்ட சராசரங்களின்
தாய் .
ஒளி அதன் முலைப்பால் .
இருள்
இறைவனின்
கரும் பலகை .
படைப்புகளை அவன்
அதில்தான் எழுதுகிறான் .
இருள் ஆழமான கவிதை .
விளக்குகள் அதற்கு
உரை சொல்ல
முயன்று
தோற்றுப்போகின்றன .
வானம்
கோடிக்கணக்கான
கண் திறந்து
இமை கொட்டாமல் பார்ப்பது
இருளின் அழகைத்தான் .
ஒளியில் நீங்கள்
பிறரைத்தான்
பார்க்கிறீர்கள்.
இருளில்தான் நீங்கள்
உங்களைப் பார்க்கிறீர்கள்.
கூட்டின் இருளில்
தவமிருக்கும்
பட்டாம் பூச்சி
சிறகுகளைப் பெறுகிறது .
நீங்கள்
இருளிலிருந்து
ஒளிக்குச் செல்லுங்கள்
என்கிறீர்கள்.
நானோ
ஒளியிலிருந்து
இருளுக்குச் செல்லுங்கள்
என்கிறேன் .
தீபங்கள் எல்லாம்
அணையும் போதுதான்
ஞானம் பிறக்கிறது .
பித்தன்
-கவிக்கோ (53-54)
மத்திய ரேகை
பித்தன்
கவடி ஆட்டத்தைப்
பார்த்துக்
கொண்டிருந்தான் .
கவடி உனக்கு
பிடிக்குமா ? என்று கேட்டேன் .
‘நடுக்’கோடு எனக்குப் பிடிக்கும்
என்றவன்,
நடுக்கோட்டைத்
தொடுவதால்
அவர்கள் பிழைகிறார்கள் .
உயிரின் ரகசியம்
நடுக்கோட்டில் இருக்கிறது
என்று கூறினான்.
அவன் மேலும்
சொன்னான் :
மத்திய ரேகைக்குச்
செல்லுகிறவர்கள்
ஜீவ நீரை
அருந்துகிறார்கள் .
துருவங்களுக்குப்
போகின்றவர்கள்
மரணத்தின் வலையில்
விழுகிறார்கள் .
மிகை
நல்லதையும்
தீயதாக்கி விடுகிறது .
ஆலகாலம் என்பது
வேறொன்றுமில்லை .
அமிர்தத்தின் மிகைதான் .
வைகறையும் அந்தியும்
அழகாய் இருப்பதற்குக்
காரணம்
அவை நடுவில் இருக்கின்றன .
அதனால்
இருள் ,ஒளி இரண்டும்
அவற்றை
அலங்கரிக்கின்றன .
வாதப் பிரதிவாதங்கள்
இரண்டு கரைகள்.
உண்மையோ
நதியாக
இரண்டுக்கும்
நடுவில் ஓடுகிறது .
பூவின் சாரம்
நடுவில் ஒளிந்திருக்கும்
தேனில் இருக்கிறது .
உதிரும் இதழ்களில்
இல்லை .
மையத்திலிருந்து
விலகும் எதுவும்
வீரியம் இழக்கிறது .
வாழ்க்கை என்பது
கழைக் கூத்து .
சமநிலை தவறுகிறவன்
விழுந்து விடுகிறான் .
பித்தன்
-கவிக்கோ (56-57)
நிகழ்
பித்தன்
ஒரு காலைத்
தூக்கிய படி
நின்றுகொண்டிருந்தான்.
என்ன
நடராஜ நடனாமா ?
என்று கேட்டேன் .
இல்லை :
ஒரு காலையாவது
நிகழ்காலத்தில்
வைக்கப்பார்க்கிறேன் :
முடியவில்லை என்றான் .
அவன் மேலும் சொன்னான் :
இட்ட அடி
இறந்த காலத்தில் :
எடுத்த அடி
எதிர்காலத்துக்கு :
அந்த அடியிலும்
இறந்த காலத்தின்
புழுதி .
எங்கே இருக்கிறது
நிகழ்காலம் ?
இருக்கிறேன் என்று
நீ சொல்லும்போதே
ஒவ்வோர் எழுத்தையும்
இறந்த காலம்
விழுங்கி கொண்டிருப்பதைப்
பார் .
இந்தக் கணம் என்று
நீ சுட்டும்போதே
அது இறந்த்த கால
உண்டியலில் விழுந்துவிடுவதைப்
பார் .
இறந்த காலத்திற்கும்
எதிர்காலத்திற்கும்
இடையில்
கோடு கிழிக்க
முயல்கிறீர்கள் .
ஓடும் நீரில்
கோடு எப்படிக்
கிழிப்பீர்கள் ?
தன் வாலையே
விழுங்கிக்கொண்டிருக்கும்
கால சர்ப்பத்தில்
நீங்கள்
பரமபதம் விளையாடுகிறீர்கள்.
காலம் என்பதே
ஒரு பொய்க்கணக்கு
அதில்
நிகழ்காலம் என்பது
போலித் தொகை .
பித்தன் -கவிக்கோ (59)
கதவு
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான் .
ஏன் இப்படிச் செய்கிறாய் ?
என்று கேட்டேன் .
கதவு திறப்பதற்கா ?
மூடுவதற்கா ?
என்று அவன் கேட்டான் .
அவன் மேலும்
சொன்னான் :
கதவுகள்
சிலநேரம்
இமைகளாகத்
தெரிகின்றன .
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன .
சில நேரம்
உதடுகளாகின்றன.
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல .
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ , இனம்புரியாத
சம்பந்தம் இருக்கிறது .
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது .
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது :
பிரிவும் இருக்கிறது.
நாம்
உள்ளே இருக்கிறோமா ?
வெளியே இருக்கிறோமா ?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன.
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம் .
மூடிய
கதவு உள்ளே
இருப்பவற்றின்
மதிப்பைக் கூட்டுகிறது .
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல ,
நமக்கும்
கதவுகள் உண்டு .
நாம்
நமக்குள்ளே செல்லவும் ,
நம்மை விட்டு வெளியேறவும்
.
ஜனனத்தில்
ஒரு கதவு
திறக்கிறது .
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது .
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா ?
வெளியேறுகிறோமா ?
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
‘யார் ‘ என்று
கேட்காதே .
ஒரு
வேளை அது
நீயாக இருக்கலாம் .
பித்தன்
-கவிக்கோ (61-62)
வீடு
வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களை
பார்த்து
பித்தன் சிரித்தான் .
ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன் ,
கூடு கட்டுவதாக
நினைத்துக்கொண்டு
இந்தப் பறவைகள்
கூண்டுகள் செய்கின்றன
‘என்றான் .
அவன் மேலும்
சொன்னான் :
வீடு கட்டுவதற்கு
மலையிலிருந்து
கற்களைக்
கொண்டு வருகிறீர்கள் .
மலையின் மௌனத்தையும்
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால் .....
காட்டிலிருந்து
மரங்களை
கொண்டு வருகிறீர்கள் .
காட்டின்
சுதந்திரத்தை
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால்...
கடலிலிருந்து
சிப்பிகளைக்
கொண்டு வருகிறீர்கள்.
கடலின்
பெருமையையும்
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால்...
நதியிலிருந்து
நீரைக்
கொண்டு வருகிறீர்கள் .
நதியின்
பாடலையும்
உங்களால்
கொண்டுவர
முடிந்திருந்தால்...
வெயிலிலிருந்து தப்பிக்க
கூரை கட்டுகிறீர்கள்.
அதனால்
நிலவை
இழந்துவிடுகிறீர்கள்.
புயலைத்
தடுக்கச்
சுவர் எழுப்புகிறீர்கள் .
அதனால்
தென்றலையும் தடுத்துவிடு
கிறீர்கள் .
நான்கு சுவர்களால்
நீங்கள்
நான்கு திசைகளையும்
இழந்து விடவில்லையா ?
உங்கள்
வீடுகளுக்குள் மட்டுமல்ல ,
உங்களுக்குள்ளும்
அறைகளைக்
கட்டிக்கொள்கிறீர்கள்.
உங்கள் வீடு
மொட்டாகவும்
நீங்கள் காற்றாகவும்
இருந்திருந்தால்
உங்கள் வாசம்
வாசமாகியிருக்குமே !
உங்கள் வீடு
தாயின் மார்பாகவும்
நீங்கள்
ரத்தமாகவும்
இருந்திருந்தால்
நீங்கள்
பாலாகியிருப்பீர்களே !
உங்கள் வீடு
கூடாகவும்
நீங்கள்
பட்டாம்பூச்சியாகவும்
இருந்திருந்தால்
நீங்கள்
சிறகுகளை
பெற்றிருப்பீர்களே !
வீட்டுக்குள்
நுழையும்போது
செருப்புகளை மட்டுமே
உங்களால்
வெளியே விடமுடிகிறது .
வெளியே செல்லும்போது
நத்தையைப் போல்
வீட்டையும் சுமந்துதான்
செல்லுகிறீர்கள் .
உங்கள் வீட்டுக்குள்
நுழையும்போதெல்லாம்
உங்கள் ஏக்கம்
உங்கள் வீட்டைத்
தேடுகிறதல்லவா ?
குயில்
கூடு கட்டுவதில்லை
அதனால் தான் அது
பாடுகிறது .
பித்தன்
-கவிக்கோ (64-66)
பெண்
பெண்களின் கூடடதைக்கண்டு
பித்தன் விலகி
ஓடினான்.
நீ பெண்களை வெறுப்பவனா ?
என்று கேட்டேன் .
இல்லை :அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிசெல்கிறேன் .
பெண்
தூரத்தில்தான்
அழகாயிருக்கிறாள் என்றான் .
அவன் மேலும் சொன்னான் .
சொர்க்கத்தையும்
நரகத்தையும் பூமியிலே நாம்
சுவைத்துப்
பார்க்கவே
இறைவன்
பெண்ணைப் படைத்தான் .
நாம்
அவள் வழியாகவே
பிரவேசிக்கிறோம் :
அவள் வழியாகத்தான்
வெளியேறவும்
வேண்டும் .
அவள்
பொருள் புரியாத கவிதை :
அதனால்தான்
அவள் கவர்ச்சி
மங்குவதில்லை .
அவள் தாயாகிப்
பரிபாலிக்கிறாள் .
தாரமாகி
நிக்கிரகம் செய்கிறாள் .
நெருப்புக்க்கன்னாடியில்
பிரதிபலிக்கும்
நம் விரோத பிம்பம்
அவள்.
நம்மை
வசீகரித்து
நம் சிறகுகளை எரிக்கும்
விளக்கு அவள்.
அழகான ஆயுதங்களால்
நம்மைத் தாக்கி
விளையாடும்
பிரியமான எதிரி அவள்.
அவள் சரக்கூடு
தீர்வதில்லை.
அவளிடம் தோற்பதால்
நாம் தப்புகிறோம் .
நம்மை
இரையாகப்
பிடித்துண்ண
இருட்டு மூலைகளில்
அவள்
வலை பின்னுகிறாள்.
நம்மை
விழுங்குவதும்
உமிழ்வதுமாக
அவள்
சலிக்காமல்
விளையாடுகிறாள்.
அவள் ஆகர்ஷணத்தில்
அடிமைகளாகி
அவளையே
சுற்றிச் சுழலும்
பரிதாபமான
கிரகங்கள் நாம் .
நாம்
காணாமல் போவதும்
அவளிடமே :
நம்மைக் கண்டெடுப்பதும்
அவளிடமே .
பெண்ணே!
உன்னிடமிருந்து
நம்மை காப்பாற்று என்று
பிராத்திப்போமாக .
பித்தன் -கவிக்கோ (68-69)
பசி
பித்தனை
விருந்துக்கு அழைத்தேன் .
அவன் மறுத்துவிட்டான் .
ஏன் ?என்று கேட்டேன் .
நீங்கள்
விருந்தைக்
கொண்டாடுகிறவர்கள் .
நானோ ,
பசியை கொண்டாடுகிறவன்
என்றான்.
அவன் மேலும் சொன்னான்:
பசி உங்கள்
வயிற்றில் பிறப்பதற்காக
நீங்கள் சொல்லுகிறீர்கள்.
நானோ
பசியின் வயிற்றில்
நீங்கள்
பிறக்கிறீர்கள்
என்கிறேன்.
பசி உங்களை
எரிக்கிறது என்று
நீங்கள் சொல்லுகிறீர்கள் .
நானோ
பசி உங்களைச்
சமைக்கிறது என்கிறேன் .
பசி உங்களை
அழுக்காக்கிறது
என்று
நீங்கள் சொல்லுகிறீர்கள்.
நானோ
பசிதான் உங்களைச்
சலவை செய்கிறது
என்கிறேன்.
பசியை நீங்கள்
நோய் என்கிறீர்கள்.
நானோ
பசியை
மருந்து என்கிறேன்.
பசி உங்கள்
காதை அடைக்கிறது
என்று நீங்கள்
சொல்லுகிறீர்கள் .
நானோ
பசிதான் உங்கள்
காதுகளைத் திறக்கிறது
என்கிறேன்.
பசியை நீங்கள்
விலங்கு என்கிறீர்கள்.
நானோ
பசியைச்
சிறகு என்கிறேன்.
அந்த சிறகு
இல்லையென்றால்
நீங்கள் இந்த
உயரங்களை
அடைந்திருக்க மாட்டீர்கள்.
பசியை நீங்கள்
பூட்டு என்கிறீர்கள்.
நானோ
பசியைச்
சாவி என்கிறேன்.
பூமியின்
பொக்கிஷ அறைகளைப்
பசியல்லவா
திறந்து வைத்தது ?
பசி
உங்கள் பூக்களை
மேய்ந்து விடுகிறது
என்று சொல்லுகிறீர்கள்.
நானோ அதுதான்
புரட்சி விதைகளை
தூவுகிறது
என்கிறேன் .
மனிதர்களே !
பசியால்
கர்ப்பம் அடையுங்கள் .
பித்தன் -கவிக்கோ (71-72)
உறக்கம்
பித்தன்
கண் மூடியபடி
படித்திருந்தான் .
என்ன உறங்குகிறாயா ?
என்று கேட்டேன்.
இல்லை :என்னைப்
பார்த்துகொண்டிருக்கிறேன்
என்றான்.
அவன் மேலும் சொன்னான்:
நான் பூபாளமாக அல்ல :
நீலாம்பரியாக வந்திருக்கிறேன் .
விழிப்பில்
நீங்கள் உங்களைத்
தொலைக்கிறீர்கள் .
உறக்கத்தில் உங்களைக்
கண்டெடுக்கிறீர்கள்.
விழிப்பில் நீங்கள்
வேடமணிந்து நடிக்கிறீர்கள் ,
உறக்கத்தில்தான் நீங்கள்
உங்கள் வேடங்களைக்
களைகிறீர்கள்.
விழிப்பு என்பது
வெளியே அலைவது
உறக்கம் என்பது
வீடு திரும்புவது .
விழிப்பு என்பது
காயம் படுவது .
உறக்கம் என்பது
கட்டுப்போடுவது .
விழிப்பு என்பது
செலவு.
உறக்கம் என்பது
வரவு.
விழிப்பு
பிறருக்காக .
உறக்கம்
உங்களுக்காக .
உறக்கம் என்ற
இருட்டறையில்தான்
நீங்கள் எடுத்த
புகைப்படங்கள்
கழுவப்படுகின்றன .
உறக்கம் உங்கள்
உண்டியல் :
கனவுகள் நீங்கள்
சேமிக்கும்
நாணயங்கள் .
உறக்கம் உங்கள்
தாய்முலையாகவும்.
கனவு நீங்கள்
குடித்து வளரும்
பாலாகவும் இருக்கிறது .
உறக்கத்தில்தான்
மரணத்தை
ஒரு காதலியாய்
அனுபவிக்க முடிகிறது .
விழிப்பு என்பது வெறும்
இமை திறப்பல்ல :
அவ்வாறே
உறக்கம் என்பது வெறும்
இமை மூடல் அல்ல .
கண்களை
மூடிக் கொண்டவளே
காண முடியாததைக்
காண்கிறான் .
உங்கள் உறக்கம்
சுற்றுவது தெரியாதபடி சுற்றும்
பம்பரத்தின் உரக்கமாய்
இருக்கட்டும் .
உங்கள் துயில்
அறிதுயிலாய் இருக்கட்டும் .
அதற்காகப் பாம்பின் மீது
படுக்கக் கற்றுக்கொள்ளுங்கள் .
உறக்கமே உங்கள்
விழிப்பாகட்டும் .
பித்தன் -கவிக்கோ (74-75)
கூட்டம்
என்ன
தனியாக அமர்ந்திருக்கிறாய் ?
என்று பித்தனிடம் கேட்டேன்.
யாரும் தனியாக
இருக்க முடியாது .
ஒவ்வொரு மனிதனும்
ஒரு கூட்டம் தான் ‘
என்றான் பித்தன் .
அவன் மேலும் சொன்னான்:
உன் ரத்தம்
ஒரு சமுத்திரம் .
அதில் வந்த
நதிகள்
எத்தனை என்பதை
நீ அறிய மாட்டாய்.
ஒரு கூட்டலின்
மொத்தம் நீ .
உன் மதிப்பு
உன்னுடையதில்லை .
நீ காணும்
ஒவ்வொரு காட்சியாலும்
நீ கர்ப்பம் அடைகிறாய் .
நீ கேட்கும்
ஒவ்வொரு ஒலியாலும்
நீ பேருகுகிறாய் .
உன் மூளை
முக்கோடி பூக்களின்
தேன் கூடு .
உன் கைரேகைகள்
உன் மூதாதையாரின்
கையெழுத்துக்கள்.
உன் சிந்தனைகள்
உன் சம்பாத்தியம் அல்ல :
அவை உன்னில் தூவப்பட்ட
விதைகளின் விளைச்சல் .
உன் பேச்சு
உன்னுடையதில்லை :
நீ வெறும் புல்லாங்குழல்.
உன் குணங்களும்
மர்மக் கைகள்
இட்ட நாணயங்களே .
நீ வெறும் உண்டியல்தான்
உன் கண்ணீர்
உன்னுடையதில்லை :
அது ஒரு
மகா சமுத்திரத்திலிருந்து
உன் வழியாக
கசியும் நீர் தான் .
நீ வெறும்
ஊற்றுக் கண்தான் .
உன் புன்னகை உன்னுடையதில்லை :
அது ஒரு
பெரொளியிலிருந்து
பாயும் கிரகணமே .
நீ வெறும் சாளரம் தான் .
இறந்து போனவர்கள்
எல்லாம்
உன்னில்
புனர்ஜென்மம்
அடைந்திருக்கிறார்கள் .
உனக்குள்
எல்லோரும் இருக்கிறார்கள் .
உன் பகைவனும்
இருக்கிறான் .
பித்தன் -கவிக்கோ (77-78)
தீக்குச்சி
தீக்குச்சி
விளக்கை ஏற்றியது .
எல்லோரும்
தீக்குச்சியை வணங்கினார்கள்.
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான் .
ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய் ?
என்று கேட்டேன் .
ஏற்றப்பட்டதை விட
ஏற்றிவைத்தது
உயர்ந்ததல்லவா ? என்றான்.
அவன் மேலும் சொன்னான் :
தீக்குச்சி தான்
பிரசவிக்கிறது .
விளக்கோ
வெறும் தொட்டில் .
தீக்குச்சி தான்
எழுதுகிறது
விளக்கோ
வெறும் காகிதம் .
தீக்குச்சி
பிச்சை போடுகிறது
விளக்கோ
வெறும் பிச்சைப்
பாத்திரம்.
தீக்குச்சி
ஒரே வார்த்தையில்
பேசி விடுகிறது .
விளக்கோ
வளவளக்கிறது .
தீக்குச்சி
ஒளிக்காகத் தன்னையே
தியாகம் செய்து
கொள்கிறது.
விளக்கோ
ஒளியினால் பிழைக்கிறது
நீங்கள்
உங்கள் தீக்குச்சிகளைக்
கொண்டாடுவாதில்லை .
விளக்குகளையே
கொண்டாடுகிறீர்கள் .
அதனால்தான்
உங்கள் திருவிழாக்கள்
இருட்டாகவே இருக்கின்றன
நீங்களும்
தீக்குச்சியாக இருக்க
விரும்புவதில்லை .
விளக்காக இருக்கவே
விரும்புகிறீர்கள்
அதனால்
சூரிய வேளையில்
நீங்கள் அணைக்கப்பட்டு
விடுகிறீர்கள் .
இதோ ,இந்தக்
குச்சியிலிருந்து
புறப்படும்
அமர ஒளியை
உங்களால்
காண முடிந்திருந்திருந்தால்
உங்கள் ஆடபர விளக்குகளின்
பிரகாசத்தில்
உங்கள் கண்
குருடாயிருந்திருக்காது .
பித்தன் -கவிக்கோ (80-81)
புத்தகம்
பித்தன்
மழைக்காகப்
பள்ளிக் கூடத்தில்
ஒதுங்கினான் .
புத்தகங்க்களைப் பார்த்து ,
சமர்த்தாயிருங்கள் .
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள் “
என்றான்
அவன் மேலும் சொன்னான் .
குழந்தைகளே
பாடப் புத்தகங்களாக
இருக்கிறார்கள் .
அவர்கள் கையில் ஏன்
காகிதப் குப்பைகளைத்
தருகிறீர்கள் ?
உங்கள் புத்தகங்கள்
கண்களைத் திறப்பதில்லை .
ஊற்று கண்களைத்
தூர்த்து விடுகின்றன .
காகித ஓடங்களை
நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி
அக்கரை போய்ச்
சேர்வீர்கள் ?
இதோ !
இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே
புரளுகின்றன,
நீங்களோ அவற்றைப்
படிப்பதில்லை .
இதோ !
உண்மையான
உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன .
நீங்களோ அவற்றைக்
கற்றுக்கொள்வதில்லை .
ஒவ்வொரு பூவும்
பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை .
நீங்கள்
நட்சத்திரங்களை
படிக்கக் கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத
எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை
அறிந்திருப்பீர்கள் .
நீங்கள்
மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை
அறிந்திருப்பீர்கள் .
உங்களுக்குக்
கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள்
மனிதனின் சாரத்தை
அறிந்திருப்பீர்கள் .
எழுத்துக்களால் அல்ல ,
காயங்களால் கற்பதே
கல்வி என்பதை
அறிந்து கொள்ளுங்கள் .
உங்கள் புத்தகங்கள்
விளக்குகளாக இருக்கின்றன .
சூரியனைக் காண
விளக்குகள்
தேவைப்படுவதில்லை .
பித்தன் -கவிக்கோ (83-84)
வார்த்தை :
பித்தன் பூவனத்தில் இருந்தான் .
என்ன செய்கிறாய் ?
என்று கேட்டேன் .
பூவின் மொழியைக்
கற்றுக் கொண்டிருக்கிறேன்
என்றான் .
அவன் மேலும் சொன்னான் .
பூவைப் போல
ஐந்து பொறிகளிடமும்
பேசும் வார்த்தை
உங்கள் மொழிகளில்
உண்டா ?
ஒவ்வொரு
பூவிலும்
ஒரு வேதம்
வெளிப்படுகிறது .
பூவின் மொழி
ஆழமானது :
அதனால் தான்
அதில் சப்தமில்லை .
நீங்கள்
அர்த்தத்தை
வார்த்தைக் கூண்டுக்குள்
அடைக்கிறீர்கள் .
வார்த்தையின் சப்தம்,
அர்த்தத்தின் சிறகுகள்
படபடக்கும் ஓசை தான் .
உங்கள் வார்த்தைகளில்
இடி மட்டும்தான்
இருக்கிறது
மின்னலும் இல்லை :
மழையும் இல்லை .
உங்கள் வார்த்தைகளில்
இடி மட்டும்தான்
இருக்கிறது .
மின்னலும் இல்லை :
மழையும் இல்லை
சப்தத்திற்குப்
பசியெடுக்கும்போது
அது அர்த்தத்தைத்
தின்றுவிடுகிறது .
சப்தத்திற்குப்
பசியெடுக்கும் போது
அது அர்த்தத்தைத்
தின்றுவிடுகிறது.
நீங்கள்
அர்த்தத்தை அல்ல.
சப்தத்தையே
வழிபடுகிறீர்கள் .
வார்த்தையைச்
சிலுவையில்
அறையுங்கள் .
அதன் ரத்தம்
உங்கள்
ஜென்ம பாவத்தைக்
கழுவட்டும் .
பித்தன் -கவிக்கோ (86)
உரிமை
உரிமை முழக்கமிட்டுச்சென்ற
ஊர்வலத்தை பார்த்துச்
சிரித்தான் பித்தன்.
ஏன் சிரிக்கிறாய் ?
என்று கேட்டேன் .
சூரியோதோதயத்தைக் கோரும்
குருடர்களைக் கண்டதால்
சிரிப்பு வராதா ?
என்றான் பித்தன்.
அவன் மேலும் சொன்னான் .
சூரியன் உதித்தாலும்
இவர்கள்
பார்க்கப் போவதில்லை.
ஒளியைப் பற்றி
அறியாமலே
இவர்கள்
ஒளியைக் கேட்கிறார்கள்.
இவர்கள்
அடைப்தையெல்லாம்
சிறை என்கிறார்கள் :
கட்டுவதை எல்லாம்
விலங்கு என்கிறார்கள் .
வானத்தில் பறக்கும்
பட்டம்
நுலை விலங்கென்று
அறுத்துக்கொண்டால்
தரையில் விழுந்துவிடும் .
தீபச் சுடர்
சிம்னியைக் கூண்டென்று
உடைத்து விட்டால்
காற்றில் அணைந்து போகும்.
பூக்கள் வெலியைச்
சிறையென்று
தகரத்து விட்டால்
மாடுகளுக்குத்
தீனியாகிவிடும்.
நதிகளை நீங்கள்
பார்த்ததில்லையா ?
அவை
சுதந்திரமாகத்தான்
ஓடுகின்றன .
ஆனால்
தங்களுக்கெனக்
கரைகளைத் தாங்களே
உண்டாகிக்கிக் கொள்கின்றன .
சுதந்திரமாகத் திரயும்
காற்று
புல்லாங்குழலுக்குள்
அடைபட்டு
விரல்களின் ஆணைக்கு
இணங்கும் போதுதான்
இசையாகிறது.
காதலில்
சிறைப்படுவது
சுதந்திரத்தை விடச்
சுகமானதல்லவா ?
அன்புக்குக்
கட்டுப்படுவது
உரிமை விட
உன்னதமானதல்லவா ?
வேர்களை
விலங்கென்று நினைக்கும்
மரங்களுக்குப்
பூக்கள் கிடைக்குமா ?
பறவைக்குச்
சிறகு முளைப்பதே
முட்டைச் சிறைக்குள்தான் .
இவர்கள்
சிறகுகளைச்
சிறகுகளுக்காகவே
கேட்கிறார்கள் .
இவர்கள்
சிறகுகள்
பறப்பதற்கே
என்கிறார்கள் .
இவர்கள்
சிறகுகளை
இலட்சியம்
என்கிறார்கள் .
அவை வெறும்
சாதனம்தான் என்பதை
இவர்கள் அறிவதில்லை .
இவர்கள்
இரைதேடிச்
செல்வதுமில்லை :
கூட்டுக்குத்
திரும்புவதுமில்லை .
சிறகை விரிக்க
ஒரு நேரம் உண்டு :
அப்படியே
சிறகை மடக்கவும்
ஒரு நேரம் உண்டு.
சிறகை
மடக்காத பறவை
கூட்டை அடைவதில்லை .
பித்தன் -கவிக்கோ (87-90)
காயம்:
பித்தன் இருட்டில்
வானத்தை பார்த்தபடி
அமர்ந்திருந்தான்
என்ன
செய்து கொண்டிருந்தாய் ?
என்று கேட்டேன் .
காயங்களை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
இருட்டின் உடலில்
இந்த
நட்சத்திரக் காயங்கள்
எவ்வளவு அழகாக
இருக்கின்றன ! என்றான் .
அவன் மேலும் சொன்னான் .
உங்கள் இதயங்ககளை
காயங்களால்
அலங்கரியுங்கள்
காயங்களால் தான்
நீங்கள்
பிரகாசிப்பீர்கள் .
காயம்படும் ஓலைதான்
சுவடியாகிறது .
காயம்படும் கல்தான்
சிலையாகிறது.
காயம்படும் மூங்கில்தான்
கானம் பாடுகிறது .
நினைவுகள் என்பவை
உங்கள்
ஆறாத காயங்களிருந்து
வடியும் ரத்தம்தான் .
அனுபவங்கள்
காயங்களாலேயே
கையெழுத்திடுகின்றன .
காயங்கள்
உணர்ச்சிகளின்
காலச்சுவடுகள்.
வாழ்க்கை
அணிவிக்கும்
பதக்கங்கள் .
உயிருடைய
இதயத்திற்கு மட்டுமே
கிடைக்கும் தர
முத்திரைகள்
காதலில்
காயம்படாத இதயம்
காதலின் ரகசியத்தை
அறியாது
காயங்களிலிருந்து
கவிதை சுரக்கிறது .
வாய் பேசும்
மொழியை விடக்
காயம் பேசும் மொழி
கனமானது .
ஆறு காயம்
காயமல்ல .
ரத்தமும் கூட
முறையீடாகி விடலாம்’
ஊமைக்காயமே
உன்னதமானது.
காயங்கள் இல்லையென்றால்
உங்கள்
இதயப் பாத்திரம்
காலியாக இருக்கிறது
என்று அரத்தம் .
காலிப்பாத்திரம்
வைத்திருப்பவர்களே !
காயங்களை
யாசியுங்கள் .
பித்தன் –கவிக்கோ (90-93)
பாரம்
பித்தன்
வீதியோரம் இருந்த
சுமைதாங்கியைப்
பெயர்த்துக் கொண்டிருந்தான்
என் இப்படச்
செய்கிறாய் ?
என்று கேட்டேன்
சுமைதாங்கி
பாரத்தை இறக்குகிறது
அதனால் உங்கள்
எடை குறைகிறது போகிறது
நான் உங்கள் எடையைக்
கூட்ட வந்திருக்கிறேன் என்றான் .
அவன் மேலும்
சொன்னான்
பாரத்தை
இறக்கி வைப்பது
மகிழ்ச்சியானது
என்கிறீர்கள்
ஆனால்
மரணத்தில்
அழுகிறீர்களே , ஏன் ?
பாரம்
மகிழ்ச்சியானது என்று
நான் சொல்கிறேன்
சுமை கிடைத்தால்
கூலிக்காரன்
மகிழ்கிறான் அல்லவா?
உங்கள் பாரமே
உங்களுக்குக்
கூலியாவதை
அறிவீர்களா ?
நாம்
பூமிக்கு வந்ததே
பாரம் சுமப்பதற்குத் தான்
இரவையும் பகலையும்
காவடி தூக்கிச் செல்லும்
நாளைப் போலவே
நீங்களும்
கண்ணீரையும் புன்னகைளையும்
சுமந்து நடக்கிறீர்கள்
தெரிந்து கொள்ளுங்கள்
புன்னகையும்
ஒரு பாரம்தான்
நீங்கள்
பறந்துவிடாமலிருக்க
உங்களுக்கு ஏதாவது
ஒரு பாரம் தேவை
சில பாரங்களை
நீங்கள் விரும்பித்
தூக்கிக் கொள்கிறீர்கள் .
சில பாரங்கள்
உங்கள் மீது
பலவந்தமாய்ச்
சுமந்தப்படுகின்றன .
உலகம்
உங்கள் பாரங்களை வைத்தே
உங்களை எடை போடுகிறது .
சில பாரங்களை நீங்கள்
இறக்கி வைத்திட முடியும்.
சில பாரங்களை நீங்கள்
இறக்கி வைக்க மாட்டீர்கள் .
உங்கள் அந்தரங்கங்களை
எந்த சுமைதாங்கியிலாவது
நீங்கள்
இறக்கி வைப்பீர்களா ?
தோளில் சுமக்கும்
பாரத்தை விட
இதயத்தில் சுமக்கும் பாரம்
கனமானதல்லவா ?
சில பாரங்களை
சுமக்கும்போது
நீங்கள்
நிமிர்கிறீர்கள்
சில பாரங்களை
இறக்கிவைக்கும் போது
நீங்கள்
குனிகிறீர்கள்
கனமான பாரம்தான்
கழுத்தை வளைக்கும்
என்கிறீர்கள்
இல்லை :
மெல்லிய நாணத்தால்
பெண்
தலை குனிவதை
நீங்கள் பார்த்ததில்லையா ?
உங்களிவிடப்
பெரிய பாரதத்தை சுமப்பது
கடினம் என்று
நினைக்கிறீர்கள்
இல்லை:
காதலை நீங்கள்
சுமப்பதில்லையா ?
மென்மையானது
கனக்காது என்று
நினைக்கிறீர்கள் .
இல்லை :
உறக்கம்
இமைகளில்
கனக்கிறதல்லவா ?
உங்கள் பாரம்
உங்களுக்கு
அன்னியோன்னியம்
ஆகட்டும் :
சொல் சுமக்கும்
அர்த்தம் போல் .
உங்கள் பாரம்
உங்களுக்கு
ஈர்ப்பை உண்டாக்கட்டும்
பெண் சுமக்கும்
பருவத்தைப் போல்.
உங்கள் பாரம்
உங்களை விட
மதிப்புடையதாகட்டும்
திரி சுமக்கும்
சுடரைப் போல்.
பித்தன் -கவிக்கோ
(96-99)
இணை.
நீ முன்னுக்கு பின்
முரணாகப் பேசுகிறாய்
என்றேன் பித்தனிடம்
அரைகுறையினிடம் தான்
முரண்பாடு இருக்காது
நான் முழுமையானவன்
என்றான் பித்தன்
அவன் மேலும் சொன்னான்:
முரண்கள்
தாயின் இரு முலைகள்
நான் இரண்டிலும்
பால் குடிக்கிறேன்.
கவனி.
முரண்
வெறும் உத்தியல்ல
அது பிரபஞ்ச ரகசியம்
நான் அதன் முகத்தைத்
திரை விலக்கிப்
பார்த்து விட்டேன்.
முரண்கள்
இருகரைகள்.
நடுவில் ஓடும்
நதி நாம்.
ஒற்றைக் கரை நதி
இருக்க முடியாது.
இரு பக்கம் கொண்ட
நாணயம் நாம்.
ஒரு பக்க நாணயத்தைச்
செய்ய முடியாது.
குறுக்கும் நெடுக்குமாக
ஓடும் நூல்களால்
நேய்யப்பட்டவர்கள் நாம்.
அதனால் தான்
உறுதியாக இருக்கிறோம்.
ஒற்றைச் சிறகால்
பறவை
பறக்க முடியாது?
எலும்பும் தசையுமாக
இல்லையென்றால்
உடல் எப்படி இயங்கும்?
கத்திகள்
எதிர் எதிராக
இல்லையென்றால்
கத்திரிக்கோல்
எப்படி வெட்டும்?
தாள் வெண்மையாகவும்
மை கறுப்பாகவும்
இல்லையென்றால்
எழுதுவது எப்படி?
படைப்பு ஒரு
கண்ணாடி அதில் ஒவ்வொன்றுக்கும்
எதிர் பிம்பம்
உண்டாகிறது.
'முன்'னால் '
பின் 'னால் உண்டாகிறதது.
'மே'லால்
'கீழ்'. உண்டாகிறது
'தொடக்க'த்தால்
'முடிவு' உண்டாகிறது
'விழிப் 'பினால்
'உறக்கம் 'உண்டாகிறது
'உண்டால்'
'இல்லை'உண்டாகிறது.
'நன்மை'
' தீமை'உண்டாகிறது
ஒன்று இல்லையென்றால்
இன்னொன்று இல்லை.
கவனி;
முரண்கள்
எதிரிகள் இல்லை;
இனைகள்
ஒட்டிப் பிறந்த
இரட்டைப் பிறவிகள்;
கள்ளக் காதலர்கள்.
நீங்கள்
பூக்களிடம் மட்டும்
அழகைப் பார்க்கிறீர்கள்;
நானோ
முள்ளிடமும் பார்க்கிறேன்.
நீங்கள்
ஒளியைப் புகழ்கிறீர்கள்;
நான்
இருளையும் ரசிக்கிறேன்.
நீங்கள்
எதை வெறுக்கிறீர்களோ
அதுவும் உங்களுக்கு
உதவுகிறது என்பதை
நீங்கள் உணர்வதில்லை.
நீங்கள்
குப்பைத் தொட்டியில்
எறியும் குழந்தைகளை
நான் எடுத்துக்
கொஞ்சுகிறேன்.
நீங்கள்
தராசுத் தட்டாய்
இருக்கிறீர்கள்.
நானோ
தராசாக இருக்கிறேன்.
இதுதான்
உங்களுக்கும்
எனக்கும் உள்ள
வேறுபாடு.
102-104 பித்தன் கவிக்கோ
பித்தன்
“ஆலாபனை”ப் பாடகனின்
இரட்டை .
ஆனால் எதிர்ப்பதம்
முரண் தொடை .
நாணயத்தின்
மறுபக்கம் .
எதிர்களின் உபாஸகன்.
நிலவின்
இருண்ட பக்கத்தைப்
பார்ப்பவன் .
இருளால்
ஒளி பெறுகிறவன்
பாடகன்
பித்தனால்
முழுமையடைகிறான்
~அப்துல் ரகுமான் ~

Comments
Post a Comment