அரசனுக்குப் பைத்தியம்...?

 


அரசனுக்குப் பைத்தியம்...?

ஒரு கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்று அரண்மனையில் இருந்தது. அதை மந்திரியும் அரச குடும்பத்தினரையும் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது. மற்றொன்று ஊரின் நடுவே இருந்தது. அதை மற்ற அனைவரும் பயன்படுத்தினர்.

ஒருநாள், ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து சில மந்திரங்களை கூறிக்கொண்டே ஏதோ ஒன்றை, அரண்மனைக்கு வெளியிலிருந்த அந்தப் பொது கிணற்றினுள் போட்டான். மக்கள் எல்லோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை!

அதன் பிறகு அந்த மந்திரவாதி, இனிமேல், இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் பருகுபவர் யாராயிருந்தாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவர் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

தண்ணீர் குடிக்க வேறு வழியில்லை, தண்ணீர் குடிக்க அவர்களால் அரண்மனைக்குள் போக முடியாது. எனவே தாங்கள் பைத்தியமாகி விடுவோம் என தெரிந்தபோதிலும் மக்கள் அந்தக் கிணற்றுத் தண்ணீரையேக் குடித்தனர்.

சூரியன் மறையும்போது அந்த தண்ணீரைக் குடித்த வயது முதிர்ந்த கிழவனிலிருந்து சிறு குழந்தை வரை அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. ராஜா, ராணி, இளவரசன், மந்திரி என்று அரண்மனைக்குள்ளிருந்தவர்களைத் தவிர, தலைநகரிலிருந்த அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது. யாருக்கும் சுயநினைவில்லை.

ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியதைச் செய்தனர். மக்கள் அம்மணமாகத் திரிந்தனர், கத்திக் கதறிக் கூக்குரலிட்டனர். ஒருவர் தலைகீழாக நின்றார், மற்றொருவர் யோகாசனம் செய்தார், எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்! என்ன செய்வது? நகர் முழுவதும் பைத்தியங்களாகி விட்டனர். எல்லோரும் பைத்தியமாகிவிட்டதால் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாருமே அங்கு இல்லை.

மந்திரியும் அரச குடும்பத்தினரும் சோகமாக இருந்தனர். நம் நாட்டு மக்கள் எல்லோரும் இப்படிப் பைத்தியமாகி விட்டனரே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். உண்மையில், அவர்களுக்குத் தங்களது உணர்வைப் பற்றி சந்தேகமாக இருந்தது. ஒருவேளை, நாம்தான் பைத்தியமாகிவிட்டோமோ என்று கூட நினைக்கத் தொடங்கி விட்டனர்.

நகர் முழுவதும் அரசரும் மந்திரியும் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தது. அரசரும் மந்திரியும் பைத்தியமாகி விட்டனர் என்ற வதந்தி பரவியது. கூட்டம் முழுவதும் அரண்மனை முன் ஒன்று கூடி அரசன் பைத்தியமாகி விட்டான் என சத்தமிட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருந்தது. எனவே அரசர் நம்மைப் போல இல்லை எனும் விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டனர்.

காவலாளிகள், வணிகர்கள், பணியாளர்கள் என்று அனைவரும் பைத்தியமாகிவிட்டனர். அதனால் அங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. எனவே அவர்கள் அனைவரும் சேர்ந்து கூடிக் கூத்தாடிக் கொண்டு, “மரியாதையாக இயல்பாகி விடு, இல்லையேல் அரண்மனையை விட்டு வெளியே வா! நாங்கள் எங்களைப் போலவே இருக்கும் ஒருவரைப் புதிய அரசராக தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என கூக்குரலிட்டனர்.

அரசர், மந்திரியிடம், “நமது படையினருக்கும் கூட பைத்தியம் பிடித்து விட்டதே, என்ன செய்வது? நமக்கு பாதுகாப்பில்லையே” என்று கேட்டார்.



மந்திரி அறிவுடையவர். வயது முதிர்ந்தவர். அவர், “அரசே, நமக்கு இனி ஒரே ஒரு வழிதான் உள்ளது. முன்வாசலை அடைத்துவிட்டுப் பின்வாசல் வழியே தப்பிச் சென்று அவர்கள் பருகிய அந்த கிணற்றிலிருந்தே நாமும் தண்ணீர் எடுத்துக் குடித்து, நாமும் அவர்களைப் போலாகி விட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பைத்தியகார கும்பல் நம்மைக் கொன்றுவிடும்” என்றார்.

அந்த அறிவுரை மிகவும் சரியானது.

அரசரும், மந்திரியும், அரச குடும்பத்தினரும் பின்வாசல் வழியே ஓடினர். அந்த மந்திரவாதி ரசாயன மாற்றம் செய்திருந்த அந்தக் கிணற்றுத் தண்ணீரை எடுத்துக் குடித்தனர். பின் அவர்கள் பின்வாசல் வழியேவரவில்லை, ஆடிக் கொண்டும், கத்திக் கொண்டும், குதித்துக் கூத்தாடிக் கொண்டும், முன் வாசல் வழியே வந்தனர். தங்களது அரசரும் மந்திரியும் இயல்பாகி விட்டதைக் கண்ட கூட்டம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அவர்கள் தங்கள் அரசரும் இயல்பு நிலையிலிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாடத் தொடங்கினர்.

 

கலீல் கிப்ரான், சூஃபி கதை

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

திருக்குறள் கலைஞர் உரை கலைஞர் மு. கருணாநிதி-குறளோவியம்

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)-கலைஞர் மு.கருணாநிதி