குதிரைக்காரனும், மேலும் சில சங்கதிகளும் ..கலீல் கிப்ரான்
குதிரைக்காரன்
அந்தக்
கடற்கரையின் அழகைப்பற்றி அவன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான்.
பார்க்கவேண்டுமென்கிற ஆசை அவனுள் ஊற்றெடுத்துப் பெருக, அன்று கிளம்பிவிட்டான் குதிரையின்
மேலேறி. விரைந்து பயணித்தும், கடற்கரை ஊரை நெருங்குவதற்குள் மாலை மறைந்து மிக
இருட்டிவிட்டிருந்தது. அருகில் தெரிந்த தங்கும்விடுதி மனசுக்கு ஆசுவாசம் தந்தது.
அதன் முன் சென்று குதிரையை நிறுத்தி இறங்கினான். ஒரு ஓரமாக நின்றிருந்த
பெருமரத்தில் குதிரையைக் கட்டினான். விடுதிக்குள் சென்று உணவருந்தியவன் இரவு
அங்கேயே தங்கிவிட்டான்.
காலையில்
எழுந்து வெளிவந்தவனை அதிர்ச்சி மிரட்டலாக வரவேற்றது. மரம் அப்படியே நின்றிருந்தது.
குதிரையைக் காணவில்லை. எவனோ இரவோடிரவாகக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான்.
மிரண்டுபோய் அங்குமிங்கும் பார்த்தான் குதிரைக்காரன். என் செய்வது இனி? திருடனா மனம் மாறி, குதிரையைத் திருப்பித் தர வருவான் ? எப்படி மேற்கொண்டு பயணிப்பது? கேள்விகள் துளைக்க சோர்ந்து
நின்றவனை, மெல்ல
நெருங்கிவந்த நாலுபேர் சூழ்ந்துகொண்டார்கள். என்ன நடந்ததென ஆர்வமாய்
விஜாரித்தார்கள். சொன்னான்.
நால்வரில்
ஒருவன், ‘குதிரையைப்
போயும்
போயும்
மரத்திலா இரவு நேரத்தில் கட்டிவைப்பது? உன்னை..’ என்று கிண்டலாக
ஆரம்பித்தவன்,
சிரிக்கத்
தொடங்கியிருந்தான்.
இன்னொருவனோ
’கடற்கரையின் அழகைப் பார்க்கவென இவ்வளவு தொலைவிலிருந்து மெனக்கெட்டு, குதிரையில் ஏறி வந்தாயாக்கும்.
உன்னைவிட ஒரு முட்டாளை நான் இதுவரைப் பார்த்ததில்லை!’ என்று அங்கலாய்த்தான்.
மூன்றாமவன்
தீர்மானமாகச் சொன்னான்:
’உன்னைப்போல
பணக்காரர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள். உங்களுக்கெல்லாம் திமிர் கொஞ்சம்
அதிகந்தான்!’
நான்காம்
ஆள், சிந்தனையிலிருந்ததாகத்
தோன்றியவன், விடுபட்டான்:
’பொதுவாக எங்கும் நடந்துசெல்லத் துணிவில்லாதவர்கள், கால்களில் வலுவில்லாதவர்கள், முழுச்சோம்பேறிகள் போன்றவர்கள்தான்
இப்படியெல்லாம் குதிரை மேலேறிப் பயணிப்பார்கள் ..’ என இழுக்க, மற்றவர்கள் ஹோ.. ஹோ.. என மேலும்
சிரிக்க ஆரம்பித்தார்கள்.
குதிரையை
இழந்தவன் திடுக்கிட்டான். ஒரு விஷயம் மனதில் பட, ஆச்சரியத்தோடு நினைத்தான் : இவர்களில்
எல்லோருக்கும் நான் செய்ததுதான் குற்றமாகத் தெரிகிறது. ஆனால், குதிரையைத் திருடிக்கொண்டுபோனவனின்
இழிசெயலைக் கண்டிக்கக்கூட வேண்டாம் – விமரிசித்தும்கூட ஒருத்தனும் ஒரு
வார்த்தை சொல்லவில்லையே?

Comments
Post a Comment