"நான் குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல!” -
"நான் குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல!” - அண்ணா பிறந்த நாள் சிறப்புப்
பகிர்வு
"தமிழன்
நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்" - அண்ணா
“பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களும்
மந்திரிகளும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் பங்கேற்க
முடியுமா என அறைகூவல் விடுக்கிறேன்” என மாநிலங்களவையில் தன்னுடைய கன்னிப்பேச்சை
அரங்கேற்றிக்கொண்டிருந்தார் அண்ணா. அப்போது மைசூரைச் சார்ந்த உறுப்பினர்
ராம்ரெட்டி, "இதற்கு ஏதாவது முன்னுதாரணம் இருக்கிறதா“ எனக் கேட்டார்.
அண்ணாவுக்கு ஆதரவாக மேற்கு வங்க உறுப்பினர் பூபேஷ் குப்தா எழுந்து, "ஒருவருடைய கன்னிப்பேச்சில் குறுக்கிடுவதற்கு ஏதாவது
முன்னுதாரணம் இருக்கிறதா“ என்றார். அதற்கு அண்ணா, “இது என்னுடைய கன்னிப்பேச்சுதான்; ஆனால், குறுக்கீடுகளால் கூச்சமடைகிறவன் அல்ல. எனவே, குறுக்கீடுகளை விரும்புகிறேன்“ என முழங்கினார். ஆம், அண்ணா என்றும் உரையாடல்களை விரும்புகிறவர். காரணம், அவர் ஒரு முழுமையான ஜனநாயகவாதி. உரையாடல்களின் வழியேதான்
ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியும் என்ற அரசியல் பாடமறிந்தவர்.
ஆனால், தற்போதைய சமகால அரசியல் சூழலில் அதற்கு எதிரானவையாகப் பல நிகழ்வுகள்
அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது
கேள்விகளை முன்வைத்த பத்திரிகையாளரிடம், ”நீ எந்தச் சாதி?“ எனப் பதில் கேள்வி எழுப்பும் அரசியல்வாதிகள் அண்ணாவின் உரையாடல்களிடமிருந்து
கற்க வேண்டிய பாடங்களும் நிறைய இருக்கின்றன...
1960-களில்
தமிழகத்தில் மொழிப்போராட்டம் உச்சத்தில் இருந்த சமயம். அப்போது தமிழகத்தில்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பார்த்து, ‘நான் சென்ஸ்’ என நேரு சொன்னது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அந்தச்
சூழலில் நேரு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்தன. அப்போது
நேருவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருந்தார், அண்ணா. ஆனால், அந்தப் போராட்டத்துக்கு அவர் அளித்திருந்த கட்டளைகள்தான் கொஞ்சம்
வித்தியாசமானவை. “கறுப்புக்கொடி காட்ட வேண்டும்; ஆனால், ’திரும்பிப் போ’ எனச் சொல்லக் கூடாது; எதையும் எரிக்கக் கூடாது; தங்கியிருக்கும் இடம் நோக்கிச் செல்லக் கூடாது; இவற்றை மீறினால் துரோகி எனச் சொல்ல மாட்டேன். நீ என் தம்பி
இல்லை என்பேன்” எனத் தம்பிகளுக்கு பாசத்தின் வழியாகத்தான் தன் கட்டளைகளை
முன்வைத்தார் அண்ணா.
என்றைக்கும் அவருடைய தம்பிகளுடனான அண்ணாவின் உரையாடல்கள், உணர்ச்சிகள் நிறைந்தவை. அதனால் தன் உடல் நிலை
மோசமாகிக்கொண்டிருந்ததையும்கூடத் தன் தம்பிகளிடமே முதலில் அறிவித்தார் அண்ணா.
"செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், உடல்நிலைதான் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதை உன்னிடம்
சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேனடா தம்பி” எனத் தன்னுடைய உடல்நிலை குறித்து
தன்னுடைய தம்பிகளிடமே தெரிவித்தார். பல லட்சம் தம்பிமார் படைகள் சூழ்ந்து அண்ணா
எனப் பற்றுதலோடு அழைத்தாலும், பெரியாரிடமிருந்து வெளியேறி, 1949 செப்டம்பர் 17-ம் தேதி ராபின்சன் பூங்காவில் கட்சி தொடங்கியபோது அண்ணாவுக்கு வயது என்னவோ 40-தான்.
15 September
1909

Comments
Post a Comment