தாயிப் நகரில் தாஹா நபிகள்
தாயிப் நகரில்
தாஹா நபிகள்
நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை
!
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !
இளமையில் பெற்றோரை
இழந்த
இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர்
!
படிக்கத் தெரியாத
– இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக்
கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !
கந்தல் அணிந்த –
இந்தக்
கருணைநபி
கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !
பாலையில் முளைத்த
– இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !
இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது
!
மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன்
சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !
வல்லூறுகளும் –
இவர்
வலைக்குள்
குடிபுகுந்து
வெள்ளைப்
புறாக்களாய்
விண்ணெங்கும்
பறந்தன !
உயர்மறை மகுடி –
இவர்
ஊதியத்கைக்
கேட்டவுடன்
நாகத்தின்
பற்களிலும்
நல்லமுதம் ஊறியது
!
தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர்
!
பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் –
ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ்
கிடைக்கும்
அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !
தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர்
நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்
ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச்
சொரிந்தீர் !
வெல்வதாக
நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர்
நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி
காலடியில்
மண்டியிட வைத்தீர்
!
உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை
காயங்கள் அல்ல !
பொறுமைக்குக்
கிடைத்த
இரத்தினப்
பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும
முத்தங்கள் !
பொய்மையை எதிர்த்த
வாய்மைத்
தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !
அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த
கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை
!
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன
!
தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா
உதிரும்?
காய்கூட உதிருமே !
ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும்
உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?
எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா
வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !

Comments
Post a Comment