உதிர்ந்த மெளனம்!-கவிக்கோ எழுதிய கடைசிக் கவிதை !
கவிக்கோ எழுதிய கடைசிக் கவிதை !
நிறுத்தம் வந்துவிட்டது
இறங்கிக் கொள்ளுங்கள்
என்றார் நடத்துநர்; ஆனால்
இன்னும் பயணம் முடியவில்லையே !
நான்
யாருக்கு அனுப்பப்பட்ட
கடிதம்
தெரியவில்லை !
முகவரியில் தவறு
நான்
ஓர் இறந்த கடிதம் !
திரும்பிப் போகலாம் என்றால்
அனுப்பியவர் முகவரியும் இல்லை !
நான் வெள்ளைக் காகிதமாய் இருந்தேன் !
என் மேல்
யார் யாரோ
ஏதேதோ
கிறுக்கினார்கள் !
இப்போது
நான் நானில்லை !
எங்கே போகும்
இந்தப் பாதை ?
யாருக்கும் தெரியவில்லை !
இருந்தாலும்
நடந்துகொண்டிருக்கிறோம் !
கண்ணாடியில் தெறித்த
அவன் முகம் கேட்டது !
உன் உண்மையான
முகம் எது ?
என்னைத் தொலைக்க
முயன்றுகொண்டிருக்கிறேன் !
எவ்வளவுதான்
நிலபுலம் சேர்த்தாலும்
ஆறடி நிலம்தான்
சொந்தம் என்கிறார்கள் !
எனக்குக் கீழே
எத்தனை பிணங்களோ ?
எனக்கு மேலே
எத்தனை பிணங்களோ ?
கண்ணாடி
அப்படியேதான் இருக்கிறது
நான் தான்
உடைந்துவிட்டேன் !
என்னிடமிருந்து புறப்பட்டு
நெடுந்தூரம் வந்துவிட்டேன் !
எங்கே போவது என்றும்
தெரியவில்லை !
திரும்பிப் போகவும்
விருப்பமில்லை !
கவிக்கோ அப்துல் ரகுமான்... உதிர்ந்த மெளனம்!

Comments
Post a Comment