தேவகானம்

 




நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமு ணுத்துச்
சொல்லும் மந்த்ரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ
நாத னுள்ளி ருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ

~~தேவகானம் ~~

கனியும் நீ படைத்தனை
கையும் நீ கொடுத்தனை
கனியை நான் பறிக்கவும்
கைய சைக்கச் செய்தனை
கனியில் உள்ள சுவையும்நீ
கனியை உண்ட மகிழ்வும்நீ
கனியையா சுவைத்தனன்?
கனியுனைச் சுவைத்தனன்

தேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ.
ஒருவர் ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா?

இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார்.

" சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது.
சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது.

அதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடியாமல் நான் அந்த இசையின் மூலம் நோக்கிப் பயணம் புறப்பட்டேன்."
இப்படித்தான் துவங்குகிறது இந்தப் புத்தகத்தின் சரித்திரம். இந்தப் புத்தகம் உருவாகினதற்கான தேவை.

ஒரு மாம்பழத்தைச் சுவைத்து முடித்தவனிடம், "என்னய்யா, பழம் எப்படி இருந்துச்சி?", என்று கேட்டால் என்ன சொல்லுவேன்?

"நல்லா இனிப்புங்க"
"மாம்பழம்ன்னாலே இனிப்புதானய்யா. அதென்ன புதுசா. பழம் எப்படி இருந்துச்சி. அத்தைச் சொல்லு"
"நல்லாதாங்க இருந்துச்சி"
"நல்லா-ன்னா எப்படிய்யா, அதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்", என்று கேட்டால் எப்படி ஒரு மாம்பழத்தின் சுவையை விவரிப்பேன்?

மல்கோவாவும், நீலம் மாம்பழமும் ஒன்றேவா? பூவனும் பேயனும் வெவ்வேறா?

இப்படித்தான் இந்தப் புத்தகம் முழுக்க விதம் விதமான மா, பலா, வாழை என சுவைக்கச் சுவைக்க வகைவகையாய் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து தேஞ்சுவையூறும் பாக்கள்; தேவகானங்கள்.
சம்பவாமி யுகே யுகே என்று பகவத் கீதையில் சொல்லும் கிருஷ்ண பரமாத்மா யுகத்திற்கு ஒருக்கா புல்டோசர் எதனையேனும் கொண்டு வந்து லோகத்தைச் சமன் செய்து விட்டுப் போனால் என்ன, வருடாவருடம் சென்னையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி என்னத்திற்காய்ப் படுத்தியெடுக்கிறான். என்று யோசிப்பவனுக்கு...

அல்லவை தினம்தினம்
அதிக மாகிப் பூமியில்
நல்லவை குறைந்து ஞாலம்
நலிவுறும் பொழுதெலாம்
வல்லவன் பிறப்பெடுத்து
வருவதில்லை நேரிலே
வெல்லுகின்ற இயற்கையின்
விதிஅதைச் செய்யுமே
...என்கிறார் கவிக்கோ.

அன்பு செய்தல், கடவுள் மீதான காதல், அவனை எல்லாவற்றிலும் காணும் முயற்சி, அருளைத் தா தா என்னும் இறைஞ்சுதல், தான் பெற்றவைகளுக்கு நன்றி நவிலல், ஏற்றத் தாழ்வுகள் குறித்த கேள்விகள், கொடைத்தன்மையின் சிறப்பு என்று பலப்பல தலைப்புகளில் அழகான தமிழில், மரபுக்கவிதை வடிவில் முந்நூற்று சொச்ச கவிதைகள்.

காணும் கண்கள் தந்த உன்னைக்
காணு கின்ற ஆசையால்
காணும் காட்சி யாவி லும்.. என்
கண்களால் துளாவினேன்
காணும் காட்சி நானடா
காணும் கண்ணும் நானடா
காணும் பார்வை வந்திடின்
காண்பை எங்கும் நீயென்றான்

கடவுள் மறுப்புப் பேசுவோருக்கு அருகினில் உலாவி வந்தவர்தாம் கவிக்கோ. அவர்களையும் அங்கங்கே ஒரு பிடி பிடிக்கிறார்.

அறிவெனும் விளக்கொளிக்கு
ஆண்டவன் அகப்படான்
அறிவை நீ அணைத்திடின்
அவனைக் காண லாகுமே

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார் குலசேகர ஆழ்வார். திருவேங்கட மலையில் மலராகவோ, மரமாகவோ, உன் கோயிற்கதவாகவோ இல்லை உன் அடியார்கள் மேலேறி நடக்கும் படிக்கல்லாகவோ ஆகியுன்னை அனுதினம் கண்டு உய்வேன் என்கிறார் பெருமாள் திருமொழியில் குலசேகரர்.
செதுக்கி வைத்த கல்லாவதனினும், ஒதுக்கி வைத்த கல்லாய்க் கிடைக்க நினைக்கும் குலசேகரரின் இந்தப் பாடல் எனக்கு எப்போதும் ஓர் வியப்பே.

இந்தக் கருத்தின் இன்னொரு முகத்தை....
துதிக்கும் தெய்வம் எங்குமே
தோன்றுவான் எனில்க ழித்து
ஒதுக்கி வைத்த கல்லிலும்
இருப்பன் அன்றோ ஈசனே
...என்கிறார் கவிக்கோ.

மரபுக் கவிதைகள்தாம் எனினும் நிரம்பவும் சிக்கலான வார்த்தைகள் கொண்டெல்லாம் கவிதைகளைப் புனையவில்லை கவிக்கோ என்பதனால் நல்ல தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் வாங்கி வாசிக்கும் வண்ணம் உள்ள புத்தகம்

புகழெலாம் அவனதே

புவிக ளுக்குத் தலைவனாம்

மிகுந்த அன்போட ருளிணன்

 மீட்கும் நாளின் அதிபதி

உகந்துநாம் வணங்குவோம்  

உதவி யாவும் வேண்டுவோம்

தகுந்த பாதை காட்டுவான்

தவறு நீக்கி காப்பனே

 

தூய தான சோதியே !

தொழுதுனை வணங்கினேன்

மாயப் பொய்மை நீக்கி என்னை

 மெய்ம்மையில் செலுத்துவாய்

தீயதாம் இருளை நீக்கியே

 ஒளியிலே செலுத்துவாய்

மாயும் தன்மை நீக்கியே

 அமர வாழ்வு நல்குவாய்

 

அரியும்நீ அறனும்நீ  

ஆதிநீஅ  ல்லாவும் நீ

சொரியும் வான் ..அ  ருட்பெருஞ்

சோதி நீ..  கர்த்தன் நீ  

பரியும் நற்பி தாவும்நீ  

பகுத்த றிந்த  “இல்லை’ நீ

விரியும் மார்க்கம் யாவும்நீ

 வினா அனைத்தின் விடையும் நீ 



காசியும் மனத்துளே

கஅபாவும்  மனத்துளே

ஈசன் எங்கும் உள்ளவன்

இடத்தில் ஏன்அ டைக்கிறாய் ?

பேசிப் பேசி மனிதருள்

 பேதங்கள் வளர்ப்பவன்

 ஈசனை அறிந்திடான்

இருள்அவன் இருப்பிடம்

 

 

 

 

“நான்” என நவில்வது

 நான் எனில் அஞ்ஞானமாம்

 “நான்”  என நவில்வது

 நீயென உணர்வதே

வான்த ரும்மெய்ஞ் ஞானமாம்

 வள்ளலே ! வரம்கொடு

“நான்”   “நீ” என்ற உணர்வுதான்

 நாச மாக அருளுவாய்



பொங்கிப் பெருக்கெடுத்தோடும் சிவவாக்கியரின் கவிதை ஓட்டத்தோடு போட்டியிட்டுப் புரண்டோடுகின்றன பாடல்கள்..

      ”என்னை நன்றாய் இறைவன் சமைத்தது
      தன்னை நன்றாய்த் தமிழ்செய்யு மாறே”
என்றார் நம் முன்னவர். கவிக்கோவோ
      ”நானோ பாடி னேன்இதை
      நாயகன் செயலிது..
      வானி ழைத்த மாரியாய்
      வண்ண எண்ணம் தருகிறான்
      தேனி ழைத்த சொற்களில்
      தீயை ஊற்றி அளிக்கிறான்..
      தானே தன்னைப் பாடினான்
      தமியேன் செய்த தொன்றிலை” என்கிறார்… இவர் செயல் எதுவும் இல்லையாம்.. பின் ஏன் இதைப் பாட வேண்டும் என்றால்…
      “அழுத கண்ணின் நீரை,மை
      ஆக்கி னேன்என் ஆண்டவா!
      எழுது கோலுன் தாள்களில்
      தொழுத தேஎன் பாக்களே..”
என்று பாடுகின்ற காரணத்தைப் பறைசாற்றுகிறார்.. எதற்காகக் கவிக்கோ இப்படிப் பாடுகிறார்… திராவிட இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய நட்புக் கொண்ட கவிஞர் இப்படிப் பாட என்ன காரணம்? இயக்கங்களைக் கடந்து இவர் மனம் எந்த வெளியில் சஞ்சரிக்கிறது…? ஆழ்ந்த தத்துவவெளிக்குள்  இவர் கவிமனம் எப்போதும் சிறகடித்துப் பறந்து கொண்டேயிருக்கிறது.
      ”உண்மையற்றதிலிருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்வாய்..இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்…மரணத்திலிருந்து என்னை மரணமிலா நிலைக்கு அழைத்துச் செல்வாய்..” என்கிறது பிரஹதாரண்யக உபநிடதம்.(1.3.28) இந்தக் கருத்தும் உண்மையும் கவிக்கோவின் மனதில் நிறைந்து கிடக்கிறது.. அதனால்தான்
      “மாயப் பொய்மை நீக்கி என்னை
      மெய்ம்மையில் செலுத்துவாய்
      தீயதாம் இருளை நீக்கி
      ஒளியிலே செலுத்துவாய்..
      மாயும் தன்மை நீக்கியே
      அமர வாழ்வு நல்குவாய்”
என்று பாடுகிறார்… சரி.. இந்த அமர வாழ்வை எப்படி அடைவது…? எளிதில் அடைந்து விட முடியுமா..? முடியக் கூடியதுதானா?..மனமே ஒருவனை உருவாக்குகிறது…அழிக்கிறது… இந்த மனதிற்குள் எத்தனை எத்தனை முடிச்சுகள்.. நான்… நான் என்று முடிச்சுகளுக்கு மேல் முடிச்சுகள்.. ”மனம் உள்ளவரைதான் உலகம். மனம் அழிக்கப்படும்போது உலகம் தனித்த ஒரு இருப்பாக இருப்பது மறைந்து போகிறது.” என்கிறது ஜ்யோதிர்பிந்து உபநிடதம்.(மந்திரம்12). இதற்கு விளக்கம் சொல்கிற குருதேவர் சிவானந்தர் “வாஸனைகள்,ஆணவம்,பற்றுதல், வெறுப்பு போன்றவை அழிக்கப்பட்டால் மனம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்கிறார்.. இதையே கடோபநிடதம்(2..3.15) “மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்பொழுது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்..உபதேசம் இவ்வளவுதான்” என்கிறது.. இந்த நிலையைக் கவிக்கோ மிக அழகாகச் சொல்கிறார்.
      ““நான்“ என நவில்வது
      நான்எனில் அஞ்ஞானமாம்
      “நான்”என நவில்வது
      நீயென உணர்வதே
      வான்த ரும்மெய்ஞ் ஞான
      வள்ளலே! வரம்கொடு
      “நான்”,”நீ”என்ற உணர்வுதான்
      நாச மாக அருளுவாய்”
என்கிற வேண்டல் இருக்கிறதே அது…அத்வைதத்தை நோக்கி நகர்கிற மனநிலை…“பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி..அப்பனிமலர் பறிக்க நண்ணேன்” என்று அடியவர் பாடிய பாடலும்“உண்ணும் சோறு பருகும் நீர் திண்ணும் வெற்றிலை யாவும் கண்ணனே” என்று ஆழ்வார் அமுதம் பொழிந்ததும் இதற்காகத்தான். இந்த நிலை எல்லாராலும் அடையக் கூடிய ஒன்றா? “வேதங்களை ஓதுவதாலோ,கூர்ந்த அறிவாலோ,அதிகக் கல்வியாலோ, ஆன்மாவை அறிய முடியாது.. ஆன்மா யாரைத் தேடுகிறதோ, அவனே அதை அடைகிறான்..அவனுக்குத் தன் மகிமையை அது காட்டுகிறது..” என்கிறது கட உபநிடதம்(23) அப்படியென்றால் அந்த ஆன்மாவை அடைவது எப்படி? “இந்த ஆன்மா வலிமையற்றவனால் அடையப்படுவதில்லை” என்கிறதே முண்டக உபநிடதம்(3.2.4) அப்படியென்றால் “எது அறிவுடனும் நம்பிக்கையுடனும் ஒருமைப்பாட்டுடன் செய்யப்படுகிறதோ அதுமிக மேலான பலனைத் தருகிறது” என்கிற சாந்தோக்ய உபநிடதக்(1.1.10) கருத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். அதனால்தான் நம் கவிக்கோ..

”விறகெனக் கிடந்தனன்
வீணையாக ஆக்கினான்
இறுக என்ந ரம்பெலாம்
இசைபெற முறுக்கினான்
அறிந்தி டாத கைகளால்
அன்போ டென்னை மீட்டினான்
சிறுமை யேனி டத்தி ருந்து
தெய்வ கீதம் வந்ததே..
என்கிறார். மதங்கள் வேறுவேறு என்றாலும் மறைபொருள் எது..? “மனிதன் இறைவனைச் சார்ந்தவன்” என்கிறது பிரம்ம சூத்திரம்(41). ஆனால் மனிதனோ மதத்தைச் சார்ந்தவனாக இருக்கிறான்.. சாதியிலே..மதங்களிலே..சமயச் சழக்குகளிலே சரிந்து விழுந்து கிடக்கிறான்… கவிக்கோ கேட்கிறார்..
      “காசியும் மனத்துளே
      கஅபாவும் மனத்துளே
      ஈசன் எங்கும் உள்ளவன்
      இடத்தில் ஏன்அ டைக்கிறாய்?”

சரியான கேள்விதான்.. ஆனால் மனிதன் தொடர்ந்து அதைத்தான் செய்கிறான்.. அதனால்தான்
      “லாபத் தின்க ணக்கினை
      மனிதன் பார்க்கி றான்அவன்
      பாபத் தின்க ணக்கினைப்
      பார்க்கிறான் பரமனே..”

என்கிறார்.. பாவத்தின் சம்பளம் மரணம் என்று சும்மாவா சொல்கிறது பைபிள்….இந்த மதம்..அந்த மதம்..இந்தத் தெய்வம்…அந்தத்  தெய்வம்.. எத்தனை பேதமைகள்.. “அந்த ஒரே ஆன்மாவை அறியுங்கள்..மற்ற பேச்சுக்களை விடுங்கள்.. மரணமிலாப் பெருநிலைக்கு இதுவே பாலம்” என்கிறது முண்டக உபநிடதம்(2.2.5). கவிக்கோவின் வார்த்தைகள் நெகிழ்ந்து விழுகின்றன…

”உன்னை யன்றி நாயனே!
ஒருவனை வணங்கிலேன்.
உன்னை யன்றி உதவியென்
றொருவனை அணுகிலேன்
உன்னை யன்றி உலகிலே
ஒருவனைப் பயந்திலேன்
உன்னை யன்றி நாதனே
ஒருவனைநான் நம்பிலேன்”
இந்த நம்பிக்கை தான் கவிஞரை இயங்க வைக்கிறது.. மரணத்தைக் கண்டு மனிதன் எப்போதும் அஞ்சுகிறான்.. அது விடுதலை என்பதை அவன் அறிய மறுக்கிறான்.. அவனுக்குப் புத்தி சொல்வது எப்படி…?

“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்திவ் வுலகு”

என்கிறார் நம் வள்ளுவப்பேராசான். இதையே கவிக்கோ
“காலையில் இருந்தவர்கள்
மாலையில் இல்லையே
மாலையில் இருந்தவர்கள்
காலையில் இல்லையே
சாலையில் புறப்பட்டார்
தடயம் ஏதும் இல்லையே
சோலையில் மலர்ந்த பூவின்
சுகந்தம்போல் மறைந்ததே..”

என்று அவன் வாழ்ந்த வாழ்க்கை பூவின் மணம்போல போய்விட்டது என்று சொல்லிவிட்டு
“ஒழிந்து போன மனிதர் மீண்டும்
உயிர்பெற் றிங்கு வருவரோ?
அழுது நீபு லம்பி டாமல்
அடுத்த வேலை பாரடா..”

என்கிறார்.. ஏனென்றால் இந்த உலகமும் வாழ்க்கையும் எப்படிப்பட்டது? நிலைத்து நிற்கக்கூடியதா?
“இவ்வுலகம் இரண்டு நாளையக் கொண்டாட்டம். இந்த வாழ்க்கை இரண்டு வினாடி விளையாட்டு. இந்த உடல் மூன்று வினாடி இருக்கும் நீர்க்குமிழி. நண்பர்கள், சொத்து, செல்வம், பெயர், புகழ்.பதவி,வீடு, மனைவி, மக்கள் அனைவரும் கனவுலக அல்லது மாயாஜலாக் காட்சிகள்.காளான் போலத் தோன்றி மறைபவை.” என்கிறது வேதாந்த ஸார உபநிடதம்(மந்திரம் 2).இந்த உண்மைநிலையைக் கவிஞர்

“வாழும் வாழ்க்கை பயணமாம்
வாய்க்கும் வீடு சத்திரம்
ஊழின் வந்த உறவுகள்
உடன்வரும் பயணிகள்
சூழும் இன்ப துன்பங்கள்
சுமக்கும் கட்டுச் சோறுதான்
வீழும் கண்ணின் நீரது
வேட்கைக் கான பானமே” என்று வாழ்வில் காணும்

உண்மைநிலையை எடுத்துரைத்துவிட்டு

 “ஆடகம்இவ் வையகம்
 ஆத்துமா நடிகனே
 கூட கம்என் றெண்ணியோர்
 கோலத் தில்வ சிக்கும்பின்
 நாடகம் முடிந்ததும்
 நனவென நினைத்ததன்
 பூடகம் விளங்கும்பின்
 புரியும் ஞான உண்மையே..”
என்கிறார். ஆனால் இந்த ஞானம் பெற என்ன நிலை பெறவேண்டும் என்பதை சிவஞானாம்ருத உபநிடதம்(மந்திரம்15) “பூரண ஆன்ம ஞானம் பெற்ற ஞானி அனைத்துயிர்களையும் ஆத்மனிலும் ஆத்மனை அனைத்துயிர்களிலும் காண்கிறார்.பிரம்மனன்றி அவருக்கு வேறு எதுவும் இல்லை. உலகில் அவர் அச்சமின்றிச் சஞ்சரிக்கிறார்” என்கிறது. இதையே நம் கவிக்கோ

      “பூவி வேஉன் புன்னகை
      புல்லி லேஉன் வார்த்தைகள்
      நாவி லேஉன் நாட்டியம்
      நதியெ லாம்உன் வாக்கியம்
      சாவி லேஉன் சாவிகள்
      சகமெ லாம்உன் சுவடுகள்
      யாவி லும்..உன் தரிசனம்
      எங்குநீ இலாததே..“
என்கிறார். நாமதேவருக்கு விசாபகேசர் இதைத்தானே தெளிவுபடுத்தினார்?
      “துன்ப மான தேடலில்
      தொலைத்த னன்நான் என்னையே..“
என்று வருந்தும் கவிஞர்
      “படியி லேறி வருமொரு
      பலமி லாமல் நிற்கிறேன்
      படியில்நீ இறங்கிவா
      பாவிமேல் இரங்கிவா..”
என்று வேண்டுகிறார். இராமகிருஷ்ண பரமஹம்சரும் அன்னை காளியிடம் இப்படித்தானே ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டிருந்தார்? மனிதன் பக்குவப்பட அவனைச் சுற்றி உள்ள சூழல்கள் மிகுந்த பயனளிக்கக் கூடியவை.  சிற்றினம் சேராமை,பெரியாரைத் துணைக்கோடல்  என்கிறார் நம் ஆசான்.. மிக கவனமாக எச்சரிக்கைக் குரலை எழுப்புகிறார்..கவிஞர்.
      “உன்மனம் ரதம்அதை
      ஓட்டு கின்ற சாரதி
      இன்னல் செய்யும் ஆசைதான்
      இதுஉனைக் கவிழ்த்திடும்…”
என்று சொல்லிவிட்டு
      ”உன்ப கைவன் நீயடா
      உன்னு டன்போ ராடுநீ
      உன்னைநீ செயித்திடின்
      உலக மேஉன் கால்களில்” என்றும்
      ”உன்னைநீ அறி..அதே
      உயர்ந்த ஞானம் ஆமடா..” என்றும் எடுத்துரைத்துவிட்டு

      “பாவம் செய்யத் தூண்டும்பேய்ப்
      பண்பெ லாம்நீ நீக்கினால்
      தேவ னாகு வாய்உனைத்
      தேசங் கள்கொண் டாடுமே..”

என்கிற பேருண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்.. அதற்குமுன் நாம் ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டும். “நல்லோர் உறவால் பற்றின்மை ஏற்படும். பற்றின்மையால் மதிமயக்கம் நீங்கும். மதிமயக்கம் நீங்கினால் மாறுபடாத உண்மை விளங்கும். உண்மை விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி” என்கிறது பஜகோவிந்தம்(9). இதை
      “பூக்கடை நுழைந்த காற்று
      புதிய வாசம் பெற்றிடும்
      சாக்கடை படிந்த காற்று
      தனித்துர் வாசம் பெற்றிடும்
      தீக்கிடை எரிதலோ
      தேவ னாக உயர்தலோ
      ஆக்கிடும்நீ கொள்சக
      வாசம்எச் சரிக்கையே..” என்று மனம் செம்மையுற எச்சரிக்கிறார்.

எல்லாம் சரி.. மனிதன் இதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறானா? எத்தனை குப்பைகள் உண்டோ அத்தனை குப்பைகளையும் சுமந்து கொண்டு அலைகிறான்.. என் சாதி,என் மதம்,என் கடவுள் என்று எத்தனை எத்தனை மூடக் கருத்துகள்..இங்கேதான் கவிக்கோ நவீனச் சித்தராகிறார்… எப்படித் தெரியுமா?
      மனிதன்  கையில் சிக்கிய
      மகேசன் தன்னை மீட்பதே
      புனித மான பணியெனப்
      புகலு வேன்என் தோழரே..”

என்று கொதிக்கிற கவிஞர் அதற்கான காரணத்தையும் கூறுகிறார்..

      “பகையைக் கற்றுத் தந்திடப்
      பலம தங்கள் உள்ளன
      அகம கிழ்ந்து நட்புடன்
      அளவ ளாவி வாழ்ந்திடும்
      வகையைக் கற்றுத் தந்திட
      மதமிங் கொன்றும் இல்லையே
      இகத்திலே மதம்என
      மதம்பி டித்த லைகிறார்.”
என்று பொங்குகிறார்.. “ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கிற ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்.. மனக்கவலை..?” என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்(7). அதை அறிந்துகொள்ளாததால்தான் இத்தனை வேதனைகள்… வேற்றுமைகள்… இதையே

      ”உனைப்ப டைத்த ஈசனே
      என்னையும் படைத்தனன்
      இனப்ப கைமை ஏனடா
      மதப்ப கைமை ஏனடா
      மனப்ப கைமை நீங்கிநாம்
      வாழ்வில் ஒன்று சேர்ந்திடின்
      வனப்பம் மிக்க சொர்க்கம் இந்த
      மண்ணில் காண லாகுமே..”

என்று பேதங்களற்ற உலகைக் காண விதைதூவுகிறார் கவிஞர். ஆனால் மதவெறியும், சாதிவெறியும் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது… அதனால்

      “உனது பக்தி உனது பூசை
      உனது தொழுகை யாவுமே
      மனித னாக்க வில்லை உன்னை
      மதங்க ளாலே என்பயன்?” என்ற வினாவை வீசிவிட்டு

      “உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி
      என்று ரைக்கும் மூடரே
      உயர்ந்த சாதி என்பவன்
      உதித்த தென்ன வாயிலா?
      உயர்ந்தவன் பசியெனில்
      உண்ப தென்ன வைரமா?
      உயர்ந்த தென்ன தாழ்ந்த தென்ன
      ஒரேஇ றைவன் படைப்பிலே..”
என்று சொல்லிவிட்டு
      “மறையனோ பறையனோ
      மடையனோ அறிஞனோ
      குறையனோ நிறையனோ
      கொடியனோ இனியனோ
      கறையனோ தூயனோ
      கள்ளனோ நல்லனோ
      இறைவன் தராசிலே
      யாவரும் சமானமே”
என்று வகைப்படுத்தி வகைப்படுத்திப் புத்தி புகட்டுகிறார். இந்த அழுக்குப் பட்ட வாழ்க்கையை எப்படிக் கழுவிக் கொள்வது… எப்படி காண்பது இறைமையை என்பதற்குச் சுருக்கமாகச் செறிவாக
      “அரிசனங்கள் விதவையர்
      அனாதை ஆகி யோரிடம்
      கரிசனம்நீ கொண்டவர்
      கண்ணின் நீரை நீக்கியே
      சிரிசனம்என் றாக்கிடின்
      தேவன்அம் முகங்களில்
      தரிசனம் அருளுவான்
      தவங்கள் தேவை இல்லையே..” என்று கூறுகிறார். நம் தமிழ்ச் சித்தர்கள் இதைத்தான் ஓங்கி ஒலித்தார்கள்.. இந்தச் சாதிவெறியை ஒழிக்கக் கவிக்கோ வழிசொல்கிறார்.. எப்படி என்பதை

      ”அயர்வி லாத கடலிலே
      ஆறுகள் கலந்தபின்
      பெயர்வி லாசம் சுவையெலாம்
      பேத மின்றிப் போகுமே
      உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி
      ஒன்றிலே கலந்தபின்
      உயர்வு மில்லை தாழ்வு மில்லை
      ஒன்று மற்றுப் போகுமே..”

என்று விளக்குகிறார். சாதி,மத எதிர்ப்பாளர்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகளும் தடைகளும் எழுந்து கொண்டே இருக்கின்றன.. ஆனால் கவிக்கோ தெளிவாகச் சொல்கிறார்.

“சாதிகுலம்…ஆத்துமாவைச்
சார்ந்ததில்லை ஆகையால்
சாதியில்லை  என்பவன்
சத்தியத்தைச் சொல்கிறான்.” என்கிறார்.  தொடர்ந்து

      “அன்பெனும் மருந்தினால்
      அனைத்து நோயும் தீர்க்கலாம்
      மன்ப தைஉன் உறவுநீ
      வாழ்க்கை யைக்கொண் டாடுவாய்.” என்கிறார்.

“சூரிய ஒளிக்கதிர்களால் பனி அகலுவதுபோல, ஞானக் கதிர்களால் அஞ்ஞானம் அகல்கிறது..” என்கிறது அத்வைதாம்ருத உபநிடதம்(மந்திரம்7). இதையே கவிஞர்

“தீப மேற்றக் கோயி லுக்குச்
செல்லு கின்ற பக்தனே!
பாப மென்ற இருளை நீக்கு
பரமன் உன்னை வாழ்த்துவான்
கோபம் நீக்கித் தூய எண்ணம்
கொண்டுநீ வணங்கிடின்
தூபம் ஒன்று தேவை யில்லை
தூய கோயில் ஆகுவாய்”

கவிக்கோ இசைக்கும் தேவகானத்தில் ஆழமான தத்துவங்கள் ஆலாபனை செய்கின்றன.. மிக எளிய சொற்கள்தான்.. ஆனால் சொல்ல வருகிற கருத்தும் சொல்லும் முறையும் மனதிற்குள் ஒட்டிக்கொள்கின்றன..

      “தோன்றியவை எல்லாம் அவருடைய கால்பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்றதான விண்ணில் இருக்கிறது.”என்கிறது புருஷசூக்தம்-ரிக்வேதம் 10-121. அதேபோல் பிரம்ம சூத்திரம் (3.2.14) “இறைவன் உருவமற்றவர். ஆனால் அவரே உருவங்கள் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறார்” என்கிறது.. இதையே கவிக்கோ

      “பூவும் ஒன்று முள்ளும் ஒன்று
      பொங்கும் தேனும் ஒன்றுதான்
      நாவும் ஒன்று மொழியும் ஒன்று
      நல்ல மௌனம் ஒன்றுதான்
      நோவும் ஒன்று சுகமும் ஒன்று
      நுகர்வ தியாவும் ஒன்றுதான்
      யாவும் ஒன்று..யாவும் ஒன்று
      யாவிலும் நிறைந்தவா..”

என்று மிக அழகாகத் தெளிவுபடுத்துகிறார்.

      எதற்காக இந்தப் பிறப்பு.. வாழ்க்கை…? எதற்கென்றால் மனிதன்.. பிறந்து வளர்ந்து மறைவதற்குள்ளாவது மனிதனாக மாற வேண்டும்.. வாழ வேண்டும்..  ஆனால் அப்படி வாழ்கிறானா..? அதைத்தான்

      ”வடிவிலே மனிதனாய்
      வந்துதிக்கும் மானிடன்
      மடிவதற்கு முன்னொரு
      மனித னாக மாறவே
      கடவுள்தந்த வாய்ப்புதான்
      கடமையான வாழ்க்கைதான்
      முடிவிலே மனிதனாய்
      முழுமை பெற்றோர் எத்தனை?”

என்று கேட்கிறார்.. நியாயமான கேள்விதான்.. அதனால் வாழும் காலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை

“இறந்தகாலம், மலர்ந்தபின்
இதழ்களை உதிர்த்தபூ
மறைந்திருக்கும் அவ்வருங்
காலம் நாளை மலரும்பூ
சிறந்த காலம் இக்கணம்
தேன்மலர்உன் கண்ணின்முன்
திறந்த காலம்..பூ இதில்
தேனருந்து தேனீயே!”

என்று வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிசொல்கிறார்.
ஏனென்றால்.

      “கல்லிலே கடவுளைக்
      காணு கின்ற பக்தனே!
      நல்லுயிர் மனிதனில்
      நாதன் தெரிய வில்லையோ?
      கல்லில் கோயில் கட்டவே
      கடவுள் வாழும் மனிதனைக்
      கொல்லு கின்ற தேன்..இந்தக்
      கொடுமை எந்த மதமடா..”

என்று குமுறுகிற கவிஞர்

      “வழிபடும் இடமெலாம்
      வணிக மாக்கி வைத்தனை
      அழிபடும் அரசியல்
      அதைக்க லந்து மதமெலாம்
      இழிபடக் கெடுத்தனை
      இறைவனைத் தரக னாக்கி
      பழிபட நடந்தனை
      பக்த னாநீ சொல்லடா..”
என்று காறித்துப்புகிறார்.. ஆனால் கவிமனம் அதோடு நின்றுவிடுமா?

      “மதம்பி டித்த மூடரால்
      மதம ழிந்து போனதே
      மதமெலாம் விலக்கினேன்
      மனித நேயம் வாய்த்ததே..”

என்று தன்நிலையைத் தெளிவுபடுத்துகிறார். மதங்களின் பெயராலும், கடவுளின் பெயராலும்  என்ன நடக்கிறது… ஏன் எழுந்தது நாத்திகம்? கவிக்கோவின் கவிமனம் தவிக்கிறது..

“ஆத்தி கன்நான் என்கிறாய்
      ஆண்டவன் பெயரிலே
      கூத்த டிக்கி றாய்பல
      குப்பைக் கதைபு னைந்தவன்
      கீர்த்தியைக்  கெடுக்கிறாய்
      இருட்டிலே கிடக்கிறாய்..
      தூர்த்த னே!உன் னாலன்றோ
      தோன்றிற் று…நாத் தீகமே..”
என்று சொல்லிவிட்டு,கடவுள் இல்லை என்பதா நாத்திகம்? உண்மையில் எது நாத்திகம் என்பதைக்.. கவிக்கோவின் பார்வையில்

      ”வன்பு செய்து பூமியில்
      வாழு கின்ற உயிர்களைத்
      துன்பு றுத்து வாயெனில்
      அதுவே துட்ட நாத்திகம்,”

 விளக்குகிறார். உண்மைதான்..  வேறு எது நாத்திகம்? “புத்தகத்தை மூடிவை..பூமி யாவும் நூலகம்” என்கிற கவிஞர்

      “அன்புதான் ஆண்டவன்
      அன்புதான் சமயமாம்
      அன்புதான் ஆலயம்
      அன்புதான் பூசையாம்
      அன்புதான் திருத்தலம்
      அன்புதான் புனிதநீர்
      அன்புதான் மானுடம்
      அன்புதான் வாழ்க்கையே”

என்று உலக ஞானிகள் உரக்கச் சொன்னதை தன் வழியில் இசைக்கிறார்… கவிக்கோவின் தனித்தகுரலும் சேர்ந்து ஒலிக்கிறது.. எப்படித் தெரியுமா?

      “மனிதரைப் பிரித்திடும்
      மதங்கள் தேவை யில்லையே
      மனிதரை இணைக்குமோர்
      மதத்தில் ஒன்று கூடுவோம்”

அதோடு விட்டாரா … அதை இப்போதே செய்தாக வேண்டும் என்பதற்காக

“நாளை நாளை நாளை என்று
நாள்க டத்தும் நண்பனே!
நீளும் அந்த நாளைநீ
இருப்ப தென்ன நிச்சயம்?
வேளை இன்று இக்கணம்
விரைந்து செய்க நண்மையே
நாளை என்ற நாளையோ
நமது கையில் இல்லையே..”

என்று உள்ளத்திற்குள் ஒளியேற்றி வைக்கிறார்… தன் கவிதைகளில் எல்லாம் ஆழமான தத்துவத் தேடல்களை விதைத்துவைத்தவர் மகாகவி தாகூர்.. அப்படித்தான் கவிக்கோவும்  தேவகானத்திற்குள் ஞானகானத்தை இசைத்துக் கொண்டே இருக்கிறார்… ஒவ்வொரு வரியிலும் தத்துவ முத்துக்கள்..உலகப் பெருஞ்சிந்தனைகள்… மானுடப் பொதுமையை மலர்த்தும் பூங்காற்று.  இந்த ஞான கானத்தைக் கேட்டுக் கேட்டு உலக மானுடம் உயர உயரப் பறக்கட்டும்.

 

 

 

 

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

திருக்குறள் கலைஞர் உரை கலைஞர் மு. கருணாநிதி-குறளோவியம்

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)-கலைஞர் மு.கருணாநிதி