ஏழு கழுதை வயசாச்சி, பத்தரை மாத்து தங்கம் போன்ற சொலவடைகளின் பொருள் என்ன?

 

பத்து + அரை + மாற்று + தங்கம் → பத்தரைமாற்றுத் தங்கம் ,

பத்து மாத்து தங்கம் = சொக்கத்தங்கம் ;

பத்தரை மாத்து தங்கம் = சொக்கத்தங்கம் + 1/2 பங்கு செம்பு;

ஆயிரத்தெட்டு மாத்து தங்கம் = அபரஞ்சி பொன் ;

பத்தரை மாற்றுத் தங்கம் என்பதில் பத்து பங்கு தங்கத்தில் 1/2 பங்கு செம்பு கலந்த பொன். அதாவது அரை பங்கு அளவிற்கு மாற்றுப் பொருள் கொண்ட பொன்.

இந்த அரை பங்கு அளவும் கலப்பு கலக்காத தங்கத்திற்கு ‘ பத்துமாற்றுத் தங்கம் ‘ என்று பெயர். இத்தங்கம் குறித்து தாயுமானவர் பாடியுள்ளார். ‘கருமருவு குகையனைய காயத்தின் ‘ என்ற பாடலில், ‘பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட பட்சத்தை என்சொல்லுவேன்’ இதே தங்கத்தை உவமையாகக் கொண்டு பாரதியார் , கண்ணன் பாட்டு பாடியுள்ளார். ‘பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும் - இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும்’.

பத்தரை மாத்து தங்கம் - 99.5 டச்சு (22 கழஞ்சு). பத்து மாற்றுத்தங்கம் (24 கழஞ்சு) - 100 டச்சு. இதைவிடவும் விலைஉயர்ந்த தங்கம் உண்டு. அது, ஆயிரத்தெட்டு மாற்றால் ஆன தங்கம். இதற்கு, ‘அபரஞ்சிப் பொன் ‘ என்று பெயர். அபரஞ்சி - 1000 டச்சு கொண்டது. வைகை ஆற்றில் இறங்கும் அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் சிலை அபரஞ்சிப் பொன்னால் செய்யப்பட்டது. இதைப் போன்று, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சிலையும் இதே பொன்னால் ஆனதே. உலகிலேயே அபரஞ்சி தங்கத்திலான சிலைகள் இவை இரண்டும்தான். அபரஞ்சிப் பூஷணம் என்பதற்கு புடமிடப்பட்ட பொன் என்பதாக நவீன தமிழ்ச்சொல் அகராதி பொருள் தருகின்றது. எட்டரை மாற்று தங்கத்தை வராகன் என்று அழைப்பர்.

தங்கம் பற்றி நமது தஞ்சை பெருவுடையார் கோவிலில் உள்ள கல்வெட்டின் வாயிலாக சில செய்திகளை அறிய முடிகிறது. பண்டைய காலத்தில் இந்த பத்தரை மாற்றை தண்டவாணி என்றும் வழங்கி உள்ளார்கள் என்பதை தஞ்சை கோவில் கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது. இராசராச சோழன் பெருவுடையார் கோவில் பண்டாரத்துக்கு வழங்கிய பொன்னாலான அணிகலன்கள் மற்றும் பாத்திரங்கள் பற்றி “உடையார் பண்டாரத்துப் பெண் கொடு செய்த” என்று தொடங்கும் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.

மேற்கூறிய அந்த கல்வெட்டில் “தண்டவாணிக்கு கால் மாற்று தண்ணியபொன்” என்ற வாசகம் உள்ளது. இது பத்தரை மாற்றுக்கு கால் மாற்று குறைந்த பொன் என்று பொருள். மேலும் பொன்னை கலஞ்சு மஞ்சாடி,குன்றி, மா என்று மிக துல்லியமாக அளவிட்டதையும் அறிய முடிகிறது, மேலும் ஆபரணங்களில் வைக்கப்பட்ட அரக்கு, பிஞ்சு போன்ற எடையும் தனியாக குறிக்கபெற்று தங்கத்தின் எடை துல்லியமாக குறிக்கபெற்று உள்ளது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஏழக நிலை என்பதே மருவி ஏழு கழுதை வயசாச்சு என்றானது :

புறப்பொருள் வெண்பாமாலை : பொதுவியற் படலம் - ஐந்தாவது துறை - ஏழகநிலை:

ஏழகம் ஊரினும் இன்னன் என்றவன்

தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று.

(பு.பொ.வெ.மா - கொளு-10-5)

”ஏழகம்” என்பது ஆட்டுக்கிடாய் - மன்னவன் (குதிரைக்கு பதில்) ஆட்டுக்கிடாய் ஏறி விளையாடும் வயதினனாய் இருப்பினும், ஆட்சிப்பொறுப்பை ஏற்று செவ்வனே நடத்துகையில் அவனை புகழ்வதே “ஏழகநிலை” என்பது கருத்து.

மன்னர்கள் சிறுவயதில், குதிரை ஏற போதிய உயரம் இல்லாத நிலையில், ஆட்டுக்கிடாய் ஏறி குதிரைப்போல் செலுத்தி விளையாடுவார்கள் சங்கவிலக்கியத்தில் மிகவிளம் வயதில் ஆட்சியேற்ற, பாடல்பெற்ற ஒரே மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனே, அவன்மேல் ஏழகப்பாடல் எதுவுமில்லை, எனினும் புலவர்கள் பாடிப்புகழும் அளவிற்கு நன்றாய் ஆட்சியும் செய்கின்றான் - நம் நெடுஞ்செழியனை ஒத்த வயதுடைய - அன்னிலையில் அண்டைநாட்டு இளவரசன் ஒருவன் பொறுப்பின்றி திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் கொள்ளுங்கள், அவனது தாய் (அஃதாவது அந்நாட்டின் அரசி) அவனை எப்படி திட்டியிருப்பார்?

”அவனை (நம் கணக்குப்படி, நெடுஞ்செழியனை) பாரு, ஏழக வயசுல என்னென்ன செயல்கள் செய்யுறான், நீயும் இருக்கியே, வெட்டியா ஊரைச்சுத்திகிட்டு, வம்பு செய்துகிட்டு...” என்றுதானே?


https://ta.quora.com/elu-kalutai-vayacacci-pattarai-mattu-tankam-ponra-colavataikalin-porul-enna

Comments

Popular posts from this blog

திமுக கடந்து வந்த தேர்தல்களின் வரலாறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!-(புறநானூறு - பாடல்: 192 பாடியவர்: கணியன் பூங்குன்றன்)-கலைஞர் மு.கருணாநிதி

மானங்காத்த மறவன்!(புறநானூறு: பாடல்: 74 பாடியவர்: சேரமான் கணைக்கால் இரும்பொறை)-கலைஞர் மு.கருணாநிதி